குஜராத்தில் இரண்டு நாட்கள் கெஜ்ரிவால் சுற்றுப்பயணம்
குஜராத்தில் இரண்டு நாட்கள் கெஜ்ரிவால் சுற்றுப்பயணம்
ADDED : செப் 06, 2025 11:28 PM
புதுடில்லி:ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், இரண்டு நாள் சுற்றுப் பயணமாக குஜராத் சென்றார். சோட்டிலா நகரில் இன்று, பருத்தி விவசாயிகள் மத்தியில் உரையாற்றுகிறார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகருக்கு நேற்று மதியம் கெஜ்ரிவால் வந்தடைந்தார். ஆம் ஆத்மி கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சோட்டிலா நகரில் இன்று, பருத்தி விவசாயிகள் பேரணியை துவக்கி வைத்து உரையாற்றுகிறார்.
குஜராத் புறப்படுவதற்கு முன், டில்லி நிருபர்களிடம் கெஜ்ரிவால் கூறியதாவது:
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்க வேண்டும். மத்திய பா.ஜ., அரசு அமெரிக்க பருத்தி மீதான 11 சதவீத வரியை ஆகஸ்ட் 19ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை தள்ளுபடி செய்திருப்பதால், நம் நாட்டு பருத்தி விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
நம் நாட்டில் உற்பத்தியான பருத்தி அக்டோபரில் விற்பனைக்கு வரும்போது, அதை வாங்குவோர் எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருக்கும்.
இதனால், குஜராத், பஞ்சாப், தெலுங்கானா மற்றும் விதர்பா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தி உள்ளிட்ட பொருட்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என வலியுறுத்தி, குஜராத்தின் சோட்டிலாவில் இன்று பருத்தி விவசாயிகள் பேரணி நடத்தப்படும். இந்த விவகாரத்தில் மற்ற கட்சிகளும் விவசாய அமைப்புகளும் பருத்தி விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.