மூணாறுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து சாதனை கேரள அமைச்சர் பெருமிதம்
மூணாறுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து சாதனை கேரள அமைச்சர் பெருமிதம்
ADDED : அக் 26, 2025 01:44 AM
மூணாறு: ''சுற்றுலா பயணிகள் வருகையில் மூணாறு சாதனை படைத்தது ''என கேரள சுற்றுலா துறை அமைச்சர் முகம்மதுரியாஸ் தெரிவித்தார்.
கேரளாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் 'விஷன் 2031' என்ற பெயரில் மாநில அளவிலான சுற்றுலா கருத்தரங்கம் நேற்று இடுக்கி மாவட்டம் குட்டிகானத்தில் நடந்தது. மாநில நிதியமைச்சர் பாலகோபாலன் துவக்கி வைத்தார். சுற்றுலா துறை அமைச்சர் முகம்மது ரியாஸ், நீர்வளத்துறை அமைச்சர் ரோஷிஅகஸ்டின், எம்.எல்.ஏ. ராஜா மற்றும் சுற்றுலா துறை உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். பொறுப்பு, அனுபவம், கல்வி, சுற்றுலா, சுற்றுலா திறன், எதிர்கால வாய்ப்பு உட்பட எட்டு தலைப்புகளில் விவாதம் நடந்தது.
அமைச்சர் பாலகோபாலன் பேசுகையில் ''சுற்றுலா துறையில் பெரும் முன்னேற்றத்தை நோக்கமாக கொண்டு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதால் பட்ஜெட்டில் சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இம்மாநிலம் ஹெலிகாப்டர், சுகாதாரம், கடற்கரை, ஆன்மிகம் உட்பட பல்வேறு சுற்றுலாக்களுக்கு ஆற்றல் கொண்டது. உள்நாட்டு பயணிகள் வருகை மூலம் ஆண்டிற்கு சராசரி ரூ.55 ஆயிரம் கோடிக்கு அதிகமாக வருவாய் கிடைக்கிறது. மூணாறு, வயநாடு போன்ற பகுதிகளில் மேம்பாலங்கள், சிறந்த ரோடுகள் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் அரசு செயல்படுகிறது ''என்றார்.
அமைச்சர் முகம்மது ரியாஸ் பேசுகையில் ''இடுக்கி மாவட்டத்திற்கு கொரோனா பாதிப்புக்கு பிறகு வெளிநாட்டு பயணிகளின் வருகை அதிகரித்தது. அதன் எண்ணிக்கையில் தேசிய அளவிலான சராசரியை விட கேரளா முன்னிலை வகிக்கிறது. மாநிலத்தில் சுற்றுலாவை முக்கிய தொழிலாக மாற்றும் முயற்சி நடந்து வருகிறது. உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து மூணாறுக்கு பயணிகள் வருகை அதிகரித்து சாதனை ஏற்படுத்தியது'' என்றார்.

