ஏமன் கிளர்ச்சிப்படை பிடியில் கேரளா நர்ஸ் நிமிஷா பிரியா!
ஏமன் கிளர்ச்சிப்படை பிடியில் கேரளா நர்ஸ் நிமிஷா பிரியா!
ADDED : ஜன 06, 2025 02:50 PM

புதுடில்லி: ஏமன் நாட்டில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள கேரள நர்ஸ் நிமிஷா பிரியா, அரசுக்கு எதிராக போரிட்டு வரும் ஹவுதி கிளர்ச்சிப்படையினர் பிடியில் இருக்கிறார் என டில்லியில் இருக்கும் அந்நாட்டு துாதரகம் விளக்கம் அளித்துள்ளது.
கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர், நர்ஸ் நிமிஷா பிரியா, 36. இவர் மேற்காசிய நாடான ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2014ல், அவரது கணவர் மற்றும் பெண் குழந்தை இந்தியாவுக்கு திரும்பினர். அந்த ஆண்டில் ஏமனில் உள்நாட்டு போர் ஏற்பட்டதால், நிமிஷா பிரியாவால் நாடு திரும்ப முடியவில்லை.
கடந்த 2017 ம் ஆண்டு ஏமனில் நர்சாக பணியாற்றிய போது, அந்நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அது முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
வழக்கை விசாரித்த அந்நாட்டின் நீதிமன்றங்கள், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தன. இதையடுத்து, அந்த நாட்டின் அதிபருக்கு கருணை மனு அனுப்பப்பட்டது. அதை நிராகரித்த அந்நாட்டு அரசு, ஒரு மாதத்துக்குள் மரண தண்டனையை நிறைவேற்றும்படி  உத்தரவிட்டதாக தகவல் வெளியாகின. 'நர்ஸ் நிமிஷா பிரியாவை தண்டனையில் இருந்து தப்பிக்க வைக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்' என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. பிரியாவை மீட்க அவரது தாயார் போராடி வருகிறார்.
இந்நிலையில், டில்லியில் இருக்கும் ஏமன் நாட்டு தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஏமன் நாட்டில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள கேரள நர்ஸ் நிமிஷா பிரியா, அரசுக்கு எதிராக போரிட்டு வரும் ஹவுதி கிளர்ச்சிப்படையினர் பிடியில் இருக்கிறார். அதிபர் ரஷத் அல் அலிமி நிர்வாகத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

