ADDED : ஜூலை 30, 2025 01:10 AM

மூணாறு; கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றது.
கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அரசு தாவரவியல் பூங்கா அருகே ஜூலை 26, 27ல் காலை நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
அங்கு சீரமைப்பு பணிகள் நேற்று முன்தினம் காலை துவங்கியது. மூன்று மண் அள்ளும் இயந்திரங்கள் உட்பட பல்வேறு இயந்திரங்கள் மூலம் பணி மும்முரமாக நடந்தது. நேற்று ரோட்டில் படிந்த சேற்றை அகற்றும் பணி நடந்தது.
அப்பகுதியில் மீண்டும் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதால், அங்கு நேற்று மாவட்ட புவியியல் வல்லுனர்கள் ஆய்வு நடத்தினர்.
அதன் அறிக்கை மாவட்ட கலெக்டரிடம் தாக்கல் செய்யப்பட்டு, அதற்கு ஏற்ப போக்குவரத்து துவங்கப்படும்.
நிலச்சரிவின்போது உருண்டு வந்த பாறை ரோட்டில் நின்றதால், ரோடு தப்பியது.
இது போன்று இதே பகுதியில் 2018 ஜூலை 15, 16 ஆகிய நாட்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாறைகள் உருண்டு ரோடு கடுமையாக சேதமடைந்து துண்டிக்கப்பட்டது. அதனை சீரமைக்க இயலாத நிலை ஏற்பட்டதால், அருகில் புதிதாக ரோடு அமைத்து போக்குவரத்து நடந்தது.