பின்தங்கி கிடக்கும் கிழக்கு நாகாலாந்து: விடிவுக்காக காத்திருக்கும் மக்கள்
பின்தங்கி கிடக்கும் கிழக்கு நாகாலாந்து: விடிவுக்காக காத்திருக்கும் மக்கள்
ADDED : ஆக 27, 2025 01:22 AM

நம் நாட்டின் வட கிழக்கே தொலைதுாரத்தில் அமைந்திருக்கும் மாநிலம் தான் நாகாலாந்து. மியான்மர் எல்லை அருகே உள்ள நாகாலாந்தில், இயற்கை வளங்கள் கொட்டி கிடக்கின்றன.
அதே சமயம் பருவ மழைக்காலங்களில் இயல்பு வாழ்க்கை அடியோடு ஸ்தம்பித்து விடும். மண்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் சாலைகள் இருந்த இடம் தெரியாமல் அடித்துச் செல்லப்பட்டிருக்கும்.
மொத்தம், 60 சட்ட சபை தொகுதிகள் உடைய இம்மாநிலத்தில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. முதல்வராக நெபியூ ரியோ பதவி வகித்து வருகிறார்.
கலாசாரம் வடக்கு நாகாலாந்தில் வளர்ச்சி பணிகள் வேகமெடுத்திருக்கும் நிலையில், கிழக்கு நாகாலாந்து புறக்கணிக்கப்பட்ட பகுதியாகவே நீடிக்கிறது.
இதனால், ஈ.என்.பி.ஓ., எனப்படும், கிழக்கு நாகாலாந்து மக்கள் இயக்கம், தனி மாநில கோரிக்கையை நீண்டகாலமாக எழுப்பி வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், கிழக்கு நாகாலாந்து விலக்கி வைக்கப்பட்ட பகுதியாக இருந்தது.
அங்கு வாழும் பழங்குடியின மக்கள், அவர்களின் கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கங்களை காக்கும் வகையில், பிரிட்டிஷ் அரசு ஒரு சட்டமே இயற்றி இருந்தது.
ஆ னால், நாளடைவில், அதுவே வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகி விட்டது. இந்த நவீன யுகத்தில் கூட, கிழக்கு நாகாலாந்து மக்கள் தனித்து விடப்பட்டவர்களாகவே இருக்கின்றனர்.
கிழக்கு பகுதியில் வளர்ச்சிக்கான எந்த தடயமும் இல்லை. நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் கூட, கிழக்கு நாகாலாந்தில் முன்னேற்றமோ, வளர்ச்சியோ ஏற்படவே இல்லை.
குறைவான ஊதியம், மோசமான உட்கட்டமைப்புகள், வளர்ச்சி என்றால் என்னவென்றே தெரியாத நிலை ஆகிய காரணிகள், இங்கு வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை மிகவும் மோசமாக்கியிருக்கிறது.
பெயரளவுக்கு கூட சாலைகள் கிடையாது. பள்ளிகள் இருக்கின்றன. ஆனால், போதிய ஆசிரியர்கள் கிடையாது. மருத்துவமனைகள் இருக்கின்றன. ஆனால், போதிய மருத்துவர்கள் கிடையாது. இதனால், கொரோனா பெருந்தொற்று காலத்தில், கிழக்கு நாகாலாந்து மருத்து வ சேவை கிடைக்காமல் பரிதவித்து போனது.
தன்னாட்சி சாங், கியாம்னியுங்கன், கோன்யாக், போம், சங்டம், திக்கிர் மற்றும் யிம்கியுங் என்பது கிழக்கு நாகாலாந்தில் தொன்று தொட்டு வாழ்ந்து வரும் 7 பழங்குடி இனங்கள்.
இவர்களுக்காக 1997ல் உருவானது தான் கிழக்கு நாகாலாந்து மக்கள் இயக்கம். ஆரம்பத்தில் தனி மாநில கோரிக்கையை முன் வைத்த இந்த இயக்கம், பின்னர் சட்டசபை மற்றும் நிதி அதிகாரத்துடன் கூடிய தன்னாட்சியை கேட்டது.
மாநில எல்லைகளை மறுவரையறை செய்வதற்கு மத்திய அரசு தயக்கம் காட்டியதால், தன்னாட்சி அதிகாரத்தையாவது தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தது.
இது வெறும் நிர்வாக அதிகாரத்தை பற்றியது அல்ல, வாழ்க்கை போராட்டத்திற்கானது. மாநில அரசின் மாற்றாந்தாய் மனோபாவத்தில் இருந்து விடுபடுவதற்கான வேள்வி தீ என்கிறது கிழக்கு நாகாலாந்து மக்கள் இயக்கம்.
மேற்கில் இருக்கும் ஆவ், அங்காமி மற்றும் செமா பழங்குடி இனங்களுக்கு மட்டுமே மாநில அரசு தேவையானதை செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
மொத்தம் உள்ள 60 சட்டசபை தொகுதிகளில், 20 தொகுதிகள் கிழக்கு நாகாலாந்தில் இருக்கின்றன. இது தான் சுயாட்சி கோரிக்கையை முன்வைக்கும் நாகாலாந்து மக்கள் அமைப்பின் பெரும் பலமாக இருக்கிறது.
புறக்கணிப்பு இதை வைத்து, கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பேரணிகள் நடத்துவது, தேர்தலை புறக்கணிப்பது போன்ற போராட்டங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன.
சமீபத்தில் கூட 2024 லோக்சபா தேர்தலை நாகாலாந்து மக்கள் இயக்கம் புறக்கணித்திருந்தது. இதனால், அந்த மக்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்க துவங்கி இருக்கிறது.
தன்னாட்சி, உள்ளூர் பாதுகாப்பு படைகளை நவீனப்படுத்துவது, மத்திய அரசின் புதிய ரெஜிமென்ட் அமைப்பது என சில கோரிக்கைகளை நிறைவேற்றப் போவதாக வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால், அதற்கான தெளிவான செயல் திட்டங்கள் இதுவரை வெளிப்படையாக சொல்லப்படவில்லை.
எனவே அரசியல் சாசனத்தின்படி, இதற்கான பணிகளை கட்டமைக்க வேண்டும் என, நாகாலாந்து மக்கள் இயக்கம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
அதே சமயம் அனைத்து நாகா பழங்குடி இன மக்களுக்காக 'நாகாலிம்' என்ற தனி மாநில கோரிக்கையை முன்னெடுத்துள்ள என்.எஸ்.சி.என்.,(ஐ.எம்) இதை எதிர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாகா ராணுவம் என்ற பெயரில் தனிப்படையை உருவாக்கி, 'நாகாலிம் மக்கள் குடியரசு' என்ற பெயரில் தனி அரசாங்கத்தையே அந்த கிளர்ச்சி அமைப்பு நடத்தி வருகிறது. 1997ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்திய ராணுவத்துக்கும், கிளர்ச்சி படைக்கும் இடையே சண் டை நிறுத்தம் அமலில் இருக்கிறது.
இந்தச் சூழலில், நாகா மக்கள் இயக்கத்தின் தன்னாட்சி கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றினால், என்.எஸ்.சி.என் (ஐ.எம்), கோஹிமா போன்ற கிளர்ச்சி அமைப்புகளுடனான அமைதி பேச்சு சீர்குலையும். அண்டை மாநிலங்களான மணிப்பூர் மற்றும் அசாமுடன் பதற்றமான சூழல் உருவாகும் என தெரிகிறது.
ஒரே வழி இதனால், கிழக்கு நாகாலாந்து மக்களின் விருப்பத்தை எப்படி நிறைவேற்றுவது என குழப்பத்தில் தவிக்கிறது மத்திய அரசு.
கோஹிமா, கிழக்கு நாகாலாந்து மக்கள் இயக்கம், என்.எஸ்.சி.என்.,(ஐ.எம்.) ஆகியவற்றை ஒன்றாக அழைத்து பேச்சு நடத்துவது தான் இதற்கு ஒரே வழி என கூறப்படுகிறது.
கிழக்கு நாகாலாந்து தேசத்தின் மற்ற பகுதிகளில் இருந்து வெகு துாரத்தில் இருக்கலாம். ஆனால், அதன் பிரச்னை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
மத்திய அரசு இதை சரியாக கையாளும் விதத்தை பொறுத்து தான், தேசத்தின் கடைகோடியில் இருப்பவர்களுக்கும் வளர்ச்சி சென்றடைகிறதா என்பது தெரியும்.
- நமது சிறப்பு நிருபர் -