எஸ்.ஆர்.எம்., ஹோட்டல் ரூ.20 கோடி செலுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு
எஸ்.ஆர்.எம்., ஹோட்டல் ரூ.20 கோடி செலுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ADDED : ஆக 27, 2025 12:24 AM
எஸ்.ஆர்.எம்., ஹோட்டல் குழுமம் வைத்துள்ள குத்தகை பாக்கியில், 20 கோடி ரூபாயை, தமிழக அரசுக்கு உடனடியாக செலுத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி காஜாமலை பகுதியில், மாநில அரசின் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான இடத்தில், எஸ்.ஆர்.எம்., குழுமம் ஹோட்டல் நடத்தி வந்தது.
இந்த இடத்துக்கான குத்தகை காலம், 2024ல் முடிவடைந்தது. இதையடுத்து, அந்த இடத்தை மீண்டும் கையகப்படுத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து, எஸ்.ஆர்.எம்., குழுமம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதிடுகையில், ''எஸ்.ஆர்.எம்., குழுமத்தின் குத்தகை காலம், 2024ல் முடிந்து விட்டது என்பதால், அந்த இடத்திற்கு அவர்கள் உரிமை கோர முடியாது. அந்த நிறுவனம் குத்தகை பாக்கியாக, 38 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது,'' என, வாதிட்டார்.
இதை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தமிழக அரசுக்கு, எஸ்.ஆர்.எம்., குழுமம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையில், 20 கோடி ரூபாயை அடுத்த ஆறு வாரத்திற்குள் செலுத்த வேண்டும். அந்தத் தொகையை செலுத்தினால் தான், வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியும். 20 கோடி ரூபாயை அரசுக்கு செலுத்தியதற்கான ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை ஹோட்டலை காலி செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், எஸ்.ஆர்.எம்., குழுமத்தின் மனு தொடர்பாக, தமிழக அரசு எட்டு வாரத்திற்குள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், விசாரணையை ஒத்தி வைத்தனர்.
-டில்லி சிறப்பு நிருபர்-