சட்டங்களை முறையாக அமல்படுத்தணும்; புனே பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு சந்திரசூட் கண்டனம்
சட்டங்களை முறையாக அமல்படுத்தணும்; புனே பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு சந்திரசூட் கண்டனம்
ADDED : பிப் 28, 2025 07:14 AM

புதுடில்லி: புனேயில் பஸ்சில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புனேயில் 26 வயதான பெண் ஒருவர் போலீஸ் ஸ்டேசன் அருகே பஸ் ஒன்றில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாவது:
பெண்களுக்கு எதிரான குற்றங்களை சட்டங்கள் உருவாக்குவதன் மூலம் மட்டும் தடுக்க முடியாது. பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களைத் தடுக்க பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்களை முறையாக அமல்படுத்துவது அவசியம்.
நிர்பயா சம்பவத்தை தொடர்ந்து சட்டங்களில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. ஏராளமான பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். அவர்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் பெண்கள் பாதுகாப்பாக உணரப்படுவார்கள். சரியான விசாரணை, வலுவான நடவடிக்கை, விரைவான தண்டனை ஆகியவை அவசியம்.
இது நீதிமன்றம் மற்றும் போலீசாரின் மிகப்பெரிய பொறுப்பு. ஒவ்வொரு சூழ்நிலையிலும், பெண்கள் தங்கள் வேலைகளை பாதுகாப்பாகச் செய்ய நாம் இதைப் பற்றி கவனமாக சிந்திக்க வேண்டும். இதுதான் ஒரு சமமான சமூகத்தின் அடிப்படை. இவ்வாறு சந்திரசூட் கூறினார்.
குற்றவாளி கைது
புனேயில் 26 வயதான பெண் ஒருவர் போலீஸ் ஸ்டேசன் அருகே பஸ் ஒன்றில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரித்தனர். குற்றம் சாட்டப்பட்ட தத்தாத்ரே ராம்தாஸ் காடே, ஷிரூரில் ஒரு பண்ணையில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டான்.