ADDED : ஏப் 11, 2024 12:08 PM

காங்டாக்: ‛‛ சிக்கிம் மாநிலத்தில் ஊழலுக்கு விடை கொடுத்துவிட்டு, பா.ஜ., ஆட்சியை அமைப்போம்'', என பா.ஜ., தேசியத் தலைவர் நட்டா கூறினார்.
32 தொகுதிகள் கொண்ட சிக்கிம் சட்டசபைக்கு ஏப்.,19 ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, அம்மாநிலத்திற்கான பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை பா.ஜ., தேசியத் தலைவர் நட்டா வெளியிட்டார்.
பிறகு நட்டா பேசியதாவது: முந்தைய அரசுகள், தனிமைப்படுத்துவதிலும், புறக்கணிப்பதையுமே நம்பின. ஆனால், பிரதமர் மோடி மட்டும் கிழக்கை பாருங்கள், கிழக்கு நோக்கி செயல்படுங்கள் ' எனக்கூறினார். மத்திய அரசுடன் இணைந்து இந்திய மேலாண்மை நிறுவனம், தேசிய வடிவமைப்பு நிறுவனம் ஆகியவற்றை நிறுவுவோம்.
கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு, அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் கண்டது. உக்ரைன் போரால் ரஷ்ய பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்தது. ஆஸ்திரேலியாவுக்கும், ஜப்பானுக்கும் இதுதான் நிலைமை. ஆனால், பிரதமர் மோடி தலைமையில் இந்திய பொருளாதாரம் 5வது இடத்திற்கு முன்னேறியது. இரும்பு உற்பத்தியில் நாம் 2வது இடத்தில் இருக்கிறோம். ஆட்டோமொபைல் உற்பத்தியில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி 3வது இடத்தில் இருக்கிறோம். மொபைல் போன்கள், சீனாவிற்கு பதில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஊழலுக்கு விடை கொடுத்து சிக்கிமில் தாமரை மலரட்டும். இவ்வாறு நட்டா பேசினார்.

