பழைய ஆர்.டி.ஆர்., பாலத்தில் இலகு ரக வாகனங்களுக்கு அனுமதி
பழைய ஆர்.டி.ஆர்., பாலத்தில் இலகு ரக வாகனங்களுக்கு அனுமதி
ADDED : அக் 27, 2026 04:11 PM
புதுடில்லி: பழைய ராவ் துலா ராம் மேம்பாலம் பழுது நீக்கப்பட்டு நேற்று முன் தினம் மாலை முதல் இலகுரக வாகனங்களின் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. இதனால், ஆறு நாட்களாக விமான நிலையத்திற்கும், தெற்கு டில்லி பகுதிகளுக்கும் நீடித்து வந்த இடையூறுகள் நீங்கின. ஆனாலும், கனரக வாகனங்களுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கும், தெற்கு டில்லிக்கும் இடையிலான வாகன போக்குவரத்தில், 2009ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய ராவ் துலா ராம் மேம்பாலம் முக்கிய பாலமாக இருந்து வருகிறது. இந்த பாலத்தின் மேற்பகுதியில் விரிசல்கள் காணப்பட்டதை தொடர்ந்து, அதன் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து, அச்சம் எழுந்தது. இதையடுத்து, அக்., 20ம் தேதி மேம்பாலம், போக்குவரத்துக்கு மூடப்பட்டு, சர்வீஸ் சாலையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. பழுது பார்க்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கின.
நேற்று முன் தினம் பழுதுபார்ப்பு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து நேற்று முன் தினம் மாலையில் இருந்து இரு சக்கர வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் மட்டும், மேம்பாலத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டன. பாலத்தின் வலுத்தன்மை குறித்த உறுதியான முடிவு வரும் வரை கன ரக வாகனங்கள் இந்த மேம்பாலத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாலத்தின் வலுத்தன்மை உறுதி செய்யும் வரை, கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் மட்டுமே செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க, போக்குவரத்து காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
