தினக்கூலியிடம் ரூ.100 கோடி சொத்து லோக் ஆயுக்தா அதிகாரிகள் 'ஷாக்'
தினக்கூலியிடம் ரூ.100 கோடி சொத்து லோக் ஆயுக்தா அதிகாரிகள் 'ஷாக்'
ADDED : ஆக 02, 2025 06:52 AM

கொப்பால் : கொப்பாலின் கே.ஆர்.ஐ.டி.எல்., கர்நாடக ரூரல் உள் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தில், தினக்கூலியாக பணியாற்றிய ஊழியர் ஒருவர், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து குவித்திருப்பதை கண்டு, லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கர்நாடகாவின் கொப்பாலில் உள்ள கே.ஆர்.ஐ.டி.எல்.,லில், சிஞ்சோளிகர் என்பவர், எலக்ட்ரிகல் இன்ஜினியராக பணி செய்தபோது, 100 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடத்தப்பட்டதாக, பொய்யான பில்கள் தயாரித்து பணம் பெறப்பட்டது.
இதுகுறித்து, சிஞ்சோளிகர், ஒப்பந்த ஊழியர் களசப்பா மற்றும் ஒரு ஒப்பந்ததாரர் மீது, கே.ஆர்.ஐ.டி.எல்., அதிகாரிகள், லோக் ஆயுக்தாவில் புகார் அளித்திருந்தனர். இதன்படி லோக் ஆயுக்தா அதிகாரிகள், களசப்பா நிடகுந்தியின் வீட்டில் இருந்து, விசாரணையை துவக்கினர்.
நேற்று முன்தினம் களசப்பா இல்லத்தில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு கிடைத்த சொத்து ஆவணங்களை கண்டு, அதிகாரிகளே அதிர்ச்சி அடைந்தனர்.
அபார்ட்மென்ட் உட்பட, 24 வீடுகள், கொப்பாலில் பிரபலமான பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட மனைகள், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், ரொக்கப் பணம் கிடைத்துள்ளன. 20 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய இவர், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி, சில நாட்களுக்கு முன் தான், பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இவர் பணி நீக்கம் செய்யப்படும்போது, மாதம் 15,000 ரூபாய் ஊதியம் பெற்றார். சாதாரண தினக்கூலியான இவரிடம், இவ்வளவு சொத்துக்கள் எப்படி வந்தன என, அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். களசப்பாவின் மனைவி, சகோதரர், மனைவியின் சகோதரர் பெயரில் சொத்துக்கள் உள்ளன.
கே.ஆர்.ஐ.டி.எல்.,லில் பெருமளவில் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. கே.ஆர்.ஐ.டி.எல்., அலுவலகத்திலும், லோக் ஆயுக்தா அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர்.