திரிபுராவில் 14 மாத பெண் குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற நபர் கைது
திரிபுராவில் 14 மாத பெண் குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற நபர் கைது
ADDED : அக் 14, 2025 12:23 AM

அகர்தலா : திரிபுராவில், 14 மாத பெண் குழந்தையை, அண்டை வீட்டில் வசித்த கூலி தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்து கொன்று, நெல் வயலில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வடகிழக்கு மாநிலமான அசாமின் சில்சாரைச் சேர்ந்த பெண், தன் 14 மாத பெண் குழந்தையுடன், திரிபுராவின் பனிசாகரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், கடந்த 11ம் தேதி இரவு அண்டை வீட்டில் வசித்த இளைஞர் ஒருவர், அப்பெண்ணிடம், குழந்தைக்கு உணவு ஊட்டி அழைத்து வருவதாக கூறி, அக்குழந்தையை பெற்று சென்றார்.
மூன்று மணி நேரத்திற்கு மேலாகியும் அந்த நபர் திரும்பாததால் பதற்றம் அடைந்த அப்பெண், கிராம மக்களின் உதவியுடன் குழந்தையை தேடினார். அப்போது அங்குள்ள நெல் வயலில் குழந்தையை கொன்று புதைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், குழந்தையை வாங்கிச் சென்ற இளைஞர், பாலியல் பலாத்காரம் செய்து கொன்று, அங்குள்ள நெல் வயலில் புதைத்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தப்பியோடிய இளைஞரை, அசாமின் நிலம்பசாரில் கைது செய்தனர்.
கைதான நபர் மீது கடத்தல், கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகளை பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பள்ளியின் கழிப்பறையில் மறைந்திருந்த மர்ம நபர் ஒ ருவர், 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தப்பியுள்ளார்.
இதுபற்றி பாதிக்கப்பட்ட சிறுமி, தன் ஆசிரியரிடமும், பெற்றோரிடமும் தனக்கு நேர்ந்த கொடூரத்தை விவரித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், போலீசில் புகார் அளித்தனர். தப்பியோடிய நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.