கர்நாடகாவில் 5 வயது சிறுமி கடத்திக் கொலை : என்கவுன்டரில் குற்றவாளி பலி
கர்நாடகாவில் 5 வயது சிறுமி கடத்திக் கொலை : என்கவுன்டரில் குற்றவாளி பலி
ADDED : ஏப் 13, 2025 10:24 PM

பெங்களூரு: கர்நாடகாவில் 5 வயது சிறுமியை பீஹாரை சேர்ந்தவன் கடத்திச் சென்று பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்து கொலை செய்தான். இதனையடுத்து போலீசை தாக்கிவிட்டு தப்ப முயன்ற குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
கர்நாடக மாநிலம் கோப்பல் மாவட்டத்தை சேர்ந்த ஏழை பெண் ஒருவர், ஹூப்ளி மாவட்டத்தில் அழகு நிலையம் ஒன்றில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். அவர் 5 வயது மகளை உடன் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிறுமியை கடத்திச் சென்றான்.
இதனையடுத்து, சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சிறுமி கடத்திச் செல்லப்பட்ட இடங்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில், அங்கு இருந்த கட்டடம் ஒன்றில் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது, அந்த சிறுமி உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை கோரி உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சிறுமியை கடத்திச் சென்றது பீஹார் தலைநகர் பாட்னாவைச் சேர்ந்த நிதேஷ் குமார் என்பது தெரியவந்தது. விசாரணையில், சிறுமிக்கு பாலியல் ரீதியில் நிதேஷ் குமார் தொல்லை கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது.
சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று நிதேஷ் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, போலீசாரை தாக்கிவிட்டு நிதேஷ்குமார் ஓட முயன்றான். இதனையடுத்து வானத்தை நோக்கி போலீசார் பாதுகாப்புக்காக சுட்டனர். இருப்பினும், நிதேஷ்குமார் போலீசை தாக்க முயன்றான். இதனையடுத்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.