ADDED : ஜூலை 26, 2025 10:18 PM
புதுடில்லி:தாதா நவீன் பாலி போல, தொழிலதிபரிடம் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து, வடமேற்கு மாவட்ட போலீஸ் துணைக் கமிஷனர் பீஷாம் சிங் கூறியதாவது:
புதுடில்லி ஆதர்ஷ் நகரில் வசிக்கும் ஒரு தொழிலதிபரை, கடந்த 3ம் தேதி போனில் தொடர்பு கொண்டு பேசியவர், தாதா நவீன் பாலி பேசுவதாக கூறியுள்ளார். மேலும், நான்கு நாட்களுக்குள் ஒரு கோடி ரூபாய் தரவில்லை என்றால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியுள்ளார்.
ஆரம்பத்தில் யாரோ விளையாடுகின்றனர் என அந்த தொழிலதிபதிபர் அதை புறக்கணித்தார். ஆனால், 2ம் தேதி இரவு 8:30 மணிக்கு மீண்டும் பேசிய அந்த நபர், கடுமையாக மிரட்டியுள்ளார். இதையடுத்து, போலீசில் தொழிலதிபர் புகார் செய்தார்.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. சைபர் கிரைம் போலீஸ் மற்றும் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், தொழிலதிபரை மிரட்டியவர் சஞ்சய்,50, என்பவர் என கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
பல தனியார் அலுவலகங்களில் பணிபுரிந்த சஞ்சய், சம்பளம் குறைவாக இருந்ததால் வேலையை துறந்தார். தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் செய்திகளை அடிக்கடி படித்த சஞ்சய் தானும் அதுபோல செய்து பெரிய தொகையுடன் செட்டில் ஆக திட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து, தாதா நவீன் பாலி எனக்கூறி தொழிலதிபரை மிரட்டியுள்ளார். விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.