வன்முறைகளுக்காக பகிரங்க மன்னிப்பு கோரிய மணிப்பூர் முதல்வர்
வன்முறைகளுக்காக பகிரங்க மன்னிப்பு கோரிய மணிப்பூர் முதல்வர்
ADDED : ஜன 01, 2025 04:26 AM

இம்பால்: மணிப்பூரில் மோதல்கள் காரணமாக ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு, அம்மாநில முதல்வர் பைரேன் சிங் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, மெய்டி மற்றும் கூகி சமூகத்தினருக்கு இடையே கடந்தாண்டு ஏற்பட்ட மோதல், மிகப்பெரிய கலவரமாக மாறியது. தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்த கலவரத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நுாற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். இந்நிலையில், இதுவரை நடந்த வன்முறை சம்பவங்களுக்கு மன்னிப்பு கோரியுள்ள முதல்வர் பைரேன் சிங், புத்தாண்டு மகிழ்ச்சிகர மாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இம்பாலில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: இந்த மொத்த ஆண்டும் மிக துரதிர்ஷ்டவசமாக அமைந்தது. கடந்த 2023 மே மாதம் முதல் தற்போது வரை நடந்த சம்பவங்களுக்கான மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன். இந்த வன்முறை சம்பவங்களால், பலர் தங்களது அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். பலர் தங்கள் வீடுகளை தொலைத்துள்ளனர். இதற்காக மிகவும் வருந்துகிறேன்; மன்னிப்பு கோருகிறேன்.
இருப்பினும், கடந்த நான்கு மாதங்களாக அமைதிக்கான சூழல் மேம்படுவதை பார்த்து நம்பிக்கை கொள்கிறேன். இந்த புதிய ஆண்டில் இயல்புநிலை திரும்புமென நம்பிக்கை உள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து சமூகங்களிடமும் நான் முறையிடுவது என்னவென்றால், என்ன நடந்ததோ, அது நடந்துவிட்டது. நீங்கள் பழைய தவறுகளை மறக்கவும், மன்னிக்கவும் வேண்டும். நாம் அமைதியான, வளமான மணிப்பூர் நோக்கிய புதிய வாழ்க்கையை துவங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

