தூத்துக்குடியில் மாற்று இடத்தில் கப்பல் கட்டும் தளம்: மார்க்சிஸ்ட் கோரிக்கை
தூத்துக்குடியில் மாற்று இடத்தில் கப்பல் கட்டும் தளம்: மார்க்சிஸ்ட் கோரிக்கை
ADDED : செப் 22, 2025 08:41 PM

சென்னை: தூத்துக்குடியில் அமைய உள்ள கப்பல் கட்டும் தளத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலர் சண்முகம், முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தூத்துக்குடியில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைய உள்ளதாகவும் தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் என தெரிவித்துள்ளீர்கள். கப்பல் கட்டும் தளம் அமைய உள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், கடந்த 90 ஆண்டுக்கு மேலாக உப்பு உற்பத்தி யில் இருப்பவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக அது இருக்கக்கூடாது.
கப்பல் கட்டும் தளம் முள்ளிக்காட்டு பகுதியில் 15 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்படுவதுடன், ஒரு லட்சம் பேர் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும். உப்பளங்கள் உள்ள இடங்கள் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால் அந்த நிலங்கள் வழியாகத்தான் குளங்களில் இருந்து மழைக்காலங்களில் வெளியேறும் வெள்ள நீர் கடலில் சென்றடைகிறது. அந்த வடிகால் இல்லாவிடில் சுற்றியுள்ள குடியிருப்புகள் வெள்ள நீர் சூழ்ந்து பேரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.
முள்ளிக்காடு பகுதியில் உள்ள உப்பு உற்பத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க அப்பகுதியை கையகபடுத்துவதை கைவிட்டு, தூத்துக்குடி வடக்கு வைப்பாறு கிராமத்தில் உள்ள 1200 ஏக்கரையும், கடற்கரையை ஒட்டியுள்ள தரிசு நிலங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள 2000 ஏக்கர் தரிசு நிலங்களையும் கப்பல் கட்டும் தளம் கட்டுவதற்கு பயன்படுத்திக் கொள்ள அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் சண்முகம் தெரிவித்துள்ளார்.