ஆப்பரேஷன் சிந்துாரில் போரிட்ட வீரர்களுக்கு பதக்கம்
ஆப்பரேஷன் சிந்துாரில் போரிட்ட வீரர்களுக்கு பதக்கம்
ADDED : ஆக 15, 2025 12:57 AM
புதுடில்லி: பாகிஸ்தானுக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையில் துணிச்சலுடன் போரிட்ட எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த, 16 பேருக்கு வீரதீர செயலுக்கான பதக்கங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
நம் நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி வீரதீர செயலுக்கான பதக்கங்களை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு அறிவிக்கும். இதன்படி, 79வது சுதந்திர தினத்தையொட்டி முப்படைகளைச் சேர்ந்த வீரர்களுக்கான பதக்கங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன.
இதில், ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக நம் ராணுவத்தினர் நடத்திய, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையில், துணிச்சலுடன் போரிட்ட பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 16 பேருக்கு வீரதீர செயலுக்கான பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதேபோல் கீர்த்தி சக்ரா விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் படையின் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் உட்பட நான்கு பேர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளன. 15 பேர் வீர் சக்ரா விருதுக்கும், 16 பேர் சவுரிய சக்ரா விருதுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, சேனா பதக்கத்திற்கு ராணுவத்தின் 58 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.