கர்நாடகாவில் குளிர் அதிகரிக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்
கர்நாடகாவில் குளிர் அதிகரிக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்
ADDED : நவ 21, 2024 05:15 AM
பெங்களூரு: 'கர்நாடகாவில் மழை குறைந்துள்ளது; ஆனால், நடப்பாண்டு குளிர் மிக அதிகமாக இருக்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை ஆய்வுத்துறை வல்லுனர் சி.எஸ்.பாட்டீல் கூறியதாவது:
கர்நாடகாவில் படிப்படியாக மழை குறைந்துள்ளது. குளிரின் தாக்கம் அதிகரிக்கிறது. டிசம்பர் முதல் 2025 மார்ச் வரை குளிர் மிக அதிகமாக இருக்கும்.
பல்வேறு மாவட்டங்களில், வெப்பநிலை மிகவும் குறைந்துள்ளது. பீதரில் 12 டிகிரி செல்ஷியஸ், விஜயபுராவில் 14 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகிறது.
வரும் நாட்களில் பீதர், கலபுரகி, யாத்கிர், ராய்ச்சூர், விஜயபுரா, பாகல்கோட், கதக், கொப்பால், பெலகாவி, தார்வாட் ஆகிய மாவட்டங்களில் வெப்ப நிலை மேலும் குறைந்து, குளிர் தாக்கம் அதிகரிக்கும்.
பெங்களூரில் அடுத்த ஏழு நாட்களில், அதிகபட்ச வெப்பநிலை 16 முதல் 18 டிகிரி செல்ஷியஸ் பதிவாகும் வாய்ப்பு உள்ளது.
பசிபிக் பெருங்கடலில் நீரின் வெப்பநிலை, வழக்கத்தை விட குறையும் அறிகுறிகள் தென்படுகின்றன. இது 'லாநினோ' என, அழைக்கப்படுகிறது.
டிசம்பரில், 'லாநினோ' தீவிரமடையும் வாய்ப்புள்ளது. இதன் விளைவாக கர்நாடகா முழுதும் வெப்பநிலை குறையும்.
குளிர் காலத்தில் அதிகாலை 4:00 மணி முதல் 8:00 மணி வரை, குளிரின் தாக்கம் அதிகம் இருக்கும். இது மக்களின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
மூச்சுத் திணறல், ஆஸ்துமா, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம். எனவே உடலை கதகதப்பாக வைத்துக் கொள்வது நல்லது.
நீரை கொதிக்க வைத்து குடிப்பது நல்லது. உணவை சூடாக சாப்பிடுவதால், குளிர்காலத்தில் ஏற்படக் கூடிய பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

