இறந்தது 83 லட்சம் பேர், நீக்கப்பட்டதோ 1.15 லட்சம் மட்டுமே; ஆதார் ஆணையம் அதிர்ச்சி!
இறந்தது 83 லட்சம் பேர், நீக்கப்பட்டதோ 1.15 லட்சம் மட்டுமே; ஆதார் ஆணையம் அதிர்ச்சி!
ADDED : ஜூலை 16, 2025 12:19 PM

புதுடில்லி: இறந்துபோன 83 லட்சம் பேர்களில் வெறும் 1.15 லட்சம் பேரின் பெயர்கள் மட்டுமே ஆதார் தகவல் தொகுப்பில் இருந்து நீக்கப்பட்ட விவரம் வெளியாகி இருக்கிறது.
அரசின் எந்த உதவி அல்லது சலுகை, இருப்பிட சான்று என பெரும்பாலான தேவைகளுக்கு ஆதார் அட்டை அடையாளமாக பயன்படுத்தப்படுகிறது. ஆதார் அட்டை வேண்டி தினமும் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விவரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
நாட்டில் தற்போது 142.39 கோடி ஆதார் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த எண்ணிக்கை ஜூன் 2025 வரை மட்டுமே. ஐ.நா. பதிவின் படி இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை(ஏப்.2025 வரை) 146.39 கோடி ஆகும்.
ஆனால் பிறப்பு மற்றும் இறப்பு விவரங்களை பதிவு செய்யும் மக்கள் பதிவு அமைப்பு படி, 2007ம் ஆண்டில் இருந்து 2019ம் ஆண்டுக்குள் பதிவான இறப்புகள் 83.5 லட்சம் பேர். அதாவது 2007-2019க்குள் மட்டுமே மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 83.5 லட்சம்.
காலமானவர்களின் பெயர்களை ஆதார் தகவல் தொகுப்பில் இருந்து UIDAI ஆணையம் நீக்குவது வழக்கம். இந்த கணக்கீட்டின்படி ஒட்டுமொத்தமாக இறந்தவர்களில், வெறும் 10 சதவீதம் பெயர்கள் மட்டுமே நிரந்தரமாக நீக்கப்பட்டு உள்ளது.
சம்பந்தப்பட்ட மாநில அரசின் இறப்பு சான்றிதழ், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தரும் தகவல்கள் ஆகியவற்றை பொறுத்து தான் ஆதார் தகவல் தொகுப்பில் இருந்து பெயர்கள் நீக்கப்படுகின்றன. இது மிகவும் சிரமத்தை தருவதாக உள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆதார் அட்டை வைத்து இருப்போரின் இறுதியான எண்ணிக்கை எவ்வளவு என்ற விவரங்கள் இல்லாதது, உயிரிழந்த பின்னரும், அவர்களின் ஆதார் அட்டை இன்னமும் செயலாக்கத்தில் உள்ளதாக காட்டப்படுவது ஆகிய சிக்கல்கள் இருப்பதாக, இந்திய தனித்துவ அடையாள ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இறப்போரின் முறையான விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட ஆதார் எண் உடனுக்குடன் நீக்கப்படுவதே இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு என்கின்றனர் வல்லுநர்கள்.