பா.ஜ.,வின் சாதனையால் ஆம் ஆத்மிக்கு பொறாமை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா காட்டம்
பா.ஜ.,வின் சாதனையால் ஆம் ஆத்மிக்கு பொறாமை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா காட்டம்
ADDED : அக் 30, 2025 01:29 AM

புதுடில்லி: “டில்லியில் செயற்கை மழை சோதனையை வெற்றிகரமாக நடத்தி வரும் பா.ஜ., அரசின் சாதனையைப் பார்த்து, ஆம் ஆத்மி பொறாமைப்படுகிறது,”என, டில்லி சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா கூறினார்.
டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
தலைநகர் டில்லியில் செயற்கை மழை பெய்விக்க, கான்பூர் ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து இரண்டு முறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் மாலை புராரி, வடக்கு கரோல்பாக் மற்றும் மயூர்விஹாரில் சோதனை நடத்தப்பட்டது.
காற்றில் ஈரப்பதம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் மழை பெய்யவில்லை. அதேநேரத்தில், டில்லிக்கு அருகில் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் லேசான மழை பெய்துள்ளது.
செயற்கை மழைக்கான சோதனைகளை வெற்றிகரமாக நடத்தும் பா.ஜ., அரசின் சாதனையைப் பார்த்து, ஆம் ஆத்மி கட்சி பொறாமைப்படுகிறது.
ஆனால், முந்தைய ஆம் ஆத்மி அரசு செயற்கை மழைக்கான சோதனையை நடத்த முயற்சியே தோல்விதான் அடைந்தது. டில்லியில் பத்து முறை செயற்கை மழை சோதனை நடத்த முடிவு திட்டமிட்டுள்ளோம்.
காற்றில் தேவையான ஈரப்பதம் கிடைத்தால் செயற்கை மழை சோதனை வெற்றி அடையும். ஒரு முறை சோதனை நடத்த -25 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது. பத்து சோதனைகளுக்குப் பிறகுதான், செயற்கை மழை குறித்து ஒரு முடிவுக்கு வர முடியும்.
ஆம் ஆத்மியின், 10 ஆண்டுகால ஆட்சியில் டில்லியை நாசம் செய்து விட்டது. யமுனை நதிக்கரையில் சத் பூஜை கொண்டாட ஆம் ஆத்மி அரசு தடை விதித்தது. ஆனால், பா.ஜ., அரசில் யமுனை நதிக்கரையில் சத் பூஜைக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டன.
மேலும், மாநகர் முழுதும் செயற்கை நீர் நிலைகள் சத் பூஜைக்காகவே உருவாக்கப்பட்டன. யமுனை நதி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளிக்கு பசுமைப் பட்டசு வெடிக்க நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுத் தந்தோம்.
இதுபோன்ற பா.ஜ., அரசின் சாதனைகளை ஆம் ஆத்மியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
வீணாகும் வரிப்பணம் ஆம் ஆத்மி கட்சியின் டில்லி மாநில தலைவரும், முன்னாள் அமைச்சருமான சவுரவ் பரத்வாஜ், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
டில்லியின் பல பகுதிகளில் செயற்கை மழைக்கான சோதனை நடத்தப்பட்டதாக பா.ஜ., அரசு கூறுகிறது. ஆனால், எங்கும் மழை பெய்யவில்லை.
வானிலை மற்றும் வேதியியல் காரணி களால் செயற்கை மழை டில்லி மாநகருக்கு ஏற்றதல்ல மத்திய அரசின் நிறுவனங்கள் ஏற்கனவே கூறியுள்ளன. இதுகுறித்து, பார்லி.,யிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அப்படி இருக்கும் போது, அதையெல்லாம் மறைத்து கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய அவசியம் என்ன? பா.ஜ., அரசு சுய விளம்பரத்துக்காக செயற்கை மழை சோதனையை நடத்தி வருகிறது. இதனால், மக்கள் வரிப்பணம் தான் வீணாகும். பலன் ஏதும் கிடைக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.

