ADDED : செப் 22, 2024 12:39 AM
சூரத்: குஜராத்தில் தண்டவாளங்களை இணைக்க பயன்படுத்தப்படும் இரும்பு பிளேட்களை அகற்றியும், போல்ட்களை தளர்த்தியும் ரயிலை கவிழ்க்க மர்மநபர்கள் சதித் திட்டம் தீட்டியிருந்தனர். ரயில்வே ஊழியர் சரியான நேரத்தில் கண்டுபிடித்ததால் சதி முறியடிக்கப்பட்டது.
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள கொசாம்பா மற்றும் கிம் ரயில் நிலையங்களுக்கு இடையேயான தண்ட வாளத்தை, லைன்மேன் நேற்று காலை சோதனையிட்டார்.
அப்போது, தண்டவாளங்களை இணைக்க பயன்படும் இரண்டு இரும்பு பிளேட்கள் அகற்றப்பட்டு, அவை தண்டவாளத்தின் மேல் வைக்கப்பட்டிருப்பதை அவர் கண்டுபிடித்தார்.
மேலும், தண்டவாளங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட போல்ட்கள் தளர்த்தப்பட்டிருப்பதையும் அவர் பார்த்தார். இது குறித்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
ரயில்வே இன்ஜினியர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேதப்படுத்தப்பட்டிருந்த தண்டவாளத்தை சீரமைத்தனர்.
இதைத் தொடர்ந்து அந்த வழித்தடத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கியது. தண்டவாளத்தை, லைன்மேன் தக்க நேரத்தில் சோதனையிட்டதால், அடுத்த சில மணி நேரங்களில் அந்த வழித்தடத்தில் செல்லவிருந்த பயணியர் ரயில் விபத்தில் சிக்காமல் தப்பியது.
இந்த சதிச் செயலை செய்தவர்கள் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.