ADDED : மார் 19, 2024 10:58 PM

ஹாசன் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா மீது தகுதி நீக்க வழக்கு நிலுவையில் உள்ளதால், வேட்பாளரை மாற்ற வேண்டும் என பா.ஜ.,வினர் அமித் ஷாவிடம் கூறியுள்ள நிலையில், அரகலகூடு ம.ஜ.த., - எம்.எல்.ஏ., மஞ்சு, முன்னாள் முதல்வர் குமாரசாமியை சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில் ஹாசனில், ம.ஜ.த.,வின் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக, பா.ஜ.,வில் இருந்து மஞ்சு போட்டியிட்டு தோல்வியடைந்தார். அப்போது பிரஜ்வல் தாக்கல் செய்த வேட்பு மனுவில், சொத்து தொடர்பாக தவறான தகவல் அளித்துள்ளார் என நீதிமன்றத்தில், மஞ்சு வழக்கு தொடர்ந்தார்.
தற்காலிக தடை
இவ்வழக்கில், பிரஜ்வல் ரேவண்ணாவை தகுதி நீக்கம் செய்து, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பிரஜ்வல் அப்பீல் செய்ததில், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையில், 2023 சட்டசபை தேர்தலுக்கு முன், பா.ஜ.,வில் இருந்து விலகிய மஞ்சு, ம.ஜ.த.,வில் இணைந்து, அரகலகூடு தொகுதியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்து உள்ளது. பா.ஜ., ஏற்கனவே 20 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
ம.ஜ.த.,வின் குமாரசாமி, மாண்டியா, ஹாசன், கோலாரில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார். ஆனாலும், அது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. கோலார் தொகுதியை ம.ஜ.த.,வுக்கு வழங்குவதில் பா.ஜ.,வுக்கு தயக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த பிரீத்தம் கவுடா, லோக்சபா தேர்தலில் ஹாசனில் போட்டியிட திட்டமிட்டார். ஆனால், கூட்டணி அமைந்துள்ளதால் ஏமாற்றம் அடைந்தார்.
ஆனாலும், ம.ஜ.த., சார்பில் மீண்டும் பிரஜ்வலுக்கே சீட் கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதனால் பிரீத்தம் கவுடா, முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி ஆகியோர் எரிச்சல் அடைந்தனர்.
'பிரஜ்வல் மீது தகுதி நீக்க வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தேர்தல் நேரத்தில் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டால், சிக்கலாகிவிடும். எனவே, அவருக்கு பதிலாக தேவகவுடா அல்லது குமாரசாமி போட்டியிடட்டும். இல்லையெனில் பா.ஜ.,வே போட்டியிடட்டும்' என்று அமித்ஷா மைசூரு வந்த போது தெரிவித்தனர்.
ஆதரவு
அதே வேளையில், அரகலகூடு ம.ஜ.த., - எம்.எல்.ஏ., மஞ்சுவும், 'தேவகவுடாவுக்கு இது கடைசி தேர்தல். அவரே மீண்டும் ஹாசனில் போட்டியிட வேண்டும்' என வலியுறுத்தியிருந்தார். அப்போது பவானி ரேவண்ணா, அவரது மகன் பிரஜ்வல் ஆகியோர், மஞ்சுவை சந்தித்து ஆதரவு கேட்டிருந்தனர்.
இந்நிலையில், பெங்களூரில் முன்னாள் முதல்வர் குமாரசாமியை, அரகலகூடு ம.ஜ.த., - எம்.எல்.ஏ., மஞ்சு நேற்று முன்தினம் சந்தித்து நீண்ட நேரம் பேசினார்.
இதனால் ஹாசனில் பிரஜ்வலுக்கு பதிலாக தேவகவுடா அல்லது அவரது மருமகள் பவானி ரேவண்ணா போட்டியிடுவரா அல்லது அத்தொகுதியை பா.ஜ.,வுக்கே விட்டுக் கொடுப்பரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.
அதேவேளையில், கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஹாசனில் போட்டியிட பவானி கடுமையாக முயற்சித்தார். ஆனால், குமாரசாமியோ, கட்சி பிரமுகர் ஸ்வரூப்புக்கு சீட் வழங்கி, அவரை வெற்றி பெற வைத்தார்.
இதனால் பவானியை சமாதானப்படுத்த ஹாசன் லோக்சபா தொகுதியை விட்டுக்கொடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல் கட்டத்திலேயே ஹாசன் தொகுதிக்கு தேர்தல் நடப்பதால், இரண்டொரு நாட்களில் வேட்பாளர் யார் என்பது தெரிந்துவிடும்.
- நமது நிருபர் -

