ஜாதிவாரி கணக்கெடுப்பு அமல்படுத்த சர்வ கட்சி எம்.எல்.ஏ.,க்கள் விருப்பம்
ஜாதிவாரி கணக்கெடுப்பு அமல்படுத்த சர்வ கட்சி எம்.எல்.ஏ.,க்கள் விருப்பம்
ADDED : அக் 08, 2024 06:18 AM

பெங்களூரு : 'ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை அமல்படுத்துங்கள்' என, முதல்வர் சித்தராமையாவிடம், எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை அமல்படுத்துவது தொடர்பாக விவாதிக்க, பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களுக்கு சித்தராமையா நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.
பெங்களூரு விதான் சவுதாவில், நேற்று மாலை நடந்த ஆலோசனை கூட்டத்தில், பா.ஜ., - எம்.எல்.சி., உட்பட 30 மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது, 'ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்துங்கள்' என கோரிக்கை கடிதமும் அளித்தனர்.
பின், சித்தராமையா அளித்த பேட்டி:
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை மட்டும், மனதில் வைத்து எடுக்கவில்லை. ஏழு கோடி கன்னடர்களுக்கான அறிக்கையாக இருக்கும். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், அறிக்கையை அமல்படுத்தும்படி என்னிடம் கடிதம் அளித்துள்ளனர்.
நாட்டிலேயே இதுபோன்று கணக்கெடுப்பை நடத்தும் முதல் மாநிலம் கர்நாடகா தான். வரும் 18ம் தேதி நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும்.
கடந்த 2013 - 2018ல், நான் முதல்வராக இருந்தபோது, ஓய்வு நீதிபதி காந்தராஜ் தலைமையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த குழு அமைக்கப்பட்டது. அந்த குழு மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று விபரம் சேகரித்தது.
முந்தைய காங்கிரஸ் அரசின் ஆட்சிக்காலம் முடிவதற்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.
குமாரசாமி முதல்வராக இருந்தபோது அறிக்கையை சமர்ப்பிக்க குழு தயாராக இருந்தது. ஆனால் அவர் அறிக்கையை கொண்டு வர ஒப்புக்கொள்ளவில்லை.
பா.ஜ., ஆட்சிக் காலத்திலும் அறிக்கையை கண்டுகொள்ளவில்லை. காந்தராஜ் தலைவர் பதவிக் காலம் முடிந்ததும், ஜெயபிரகாஷ் ஹெக்டே குழுத்தலைவர் ஆனார்.
கடந்த பிப்ரவரியில் என்னிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில் என்ன உள்ளது என்று நான் இதுவரை பார்க்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.