ADDED : ஜன 16, 2025 09:30 PM
சாகேத்: தெற்கு டில்லியில் லடோ சராய் கிராமம் அருகே நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரை போலீசார் பிடித்தபோது, அவர்கள் இருவரும் தேடப்படும் கொலைக் குற்றவாளிகள் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் கூறியது:
லடோ சராய் கிராமத்திற்கு அருகே இரவு நேர ரோந்துப் பணியின்போது தீபக் என்ற கத்யா, 30, ஹேமந்த் என்ற மோன்டி, 25, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தீபக் மீது இரட்டை கொலை, ஆயுதமேந்திய கொள்ளை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2013ல் ஒரு என்கவுண்டரைத் தொடர்ந்து தீபக் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
2022ல் விடுவிக்கப்பட்ட பின்னரும் குற்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்தார்.
அறிவிக்கப்பட்ட குற்றவாளியான ஹேமந்த் மீது கொலை உட்பட பல வழக்குகள் உள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் இருந்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் எட்டு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.