UPDATED : பிப் 09, 2025 07:53 AM
ADDED : பிப் 09, 2025 04:41 AM

பார்லிமென்ட், துணை ஜனாதிபதி வீடு, மத்திய அரசு அலுவலகங்கள், ஜனாதிபதி மாளிகையிலிருந்து இந்தியா கேட் வரை உள்ள, கடமைப் பாதை ஆகியவற்றை முற்றிலுமாக மாற்றியமைக்க 2019ல் திட்டமிட்டார் பிரதமர் மோடி.
இதற்கு, 'சென்ட்ரல் விஸ்டா' என, பெயர் வைக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு, 20,000 கோடி ரூபாய் செலவு; இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தன எதிர்க்கட்சிகள். இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் வரை சென்று அனுமதி பெற்றது மத்திய அரசு.
இதில் புதிய பார்லிமென்ட், துணை ஜனாதிபதி பங்களா, கடமைப் பாதை ஆகியவற்றின் வேலைகள் முடிந்துவிட்டன; புதிய பார்லிமென்டில் தற்போது கூட்டத்தொடர் நடைபெறுகிறது. துணை ஜனாதிபதி, புதிய பங்களாவில் குடியேறிவிட்டார்.
மத்திய அரசின், 51 அமைச்சக அலுவலகங்களுக்காக, இந்த சென்ட்ரல் விஸ்டாவில், 10 பெரிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன; இது, 'காமன் சென்ட்ரல் செக்ரட்ரியேட்' என, அழைக்கப்படுகிறது. இதில், மூன்று கட்டடங்களின் பணிகள் இந்த ஆண்டு மே மாதத்தில் முடிவடைந்துவிடும். இந்த புதிய கட்டடங்களில் இப்போது, சவுத், நார்த் ப்ளாக்கில் உள்ள பிரதமர் அலுவலகம், கேபினட் செக்ரட்ரியேட், நிதி, உள்துறை, உளவுத்துறை என, பல அலுவலகங்களும் மாற்றப்படும்.
இதனால் காலியாக உள்ள சவுத், நார்த் ப்ளாக் கட்டடங்கள், அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளன. இதற்கு, 'பாரத் தேசிய அருங்காட்சியகம்' என, பெயரிடப்பட்டு உள்ளது. 'உலகிலேயே மிகப்பெரிய அருங்காட்சியகமாக இருக்கும் இது' என்கின்றனர் அதிகாரிகள்.

