நக்சல்கள் தேடுதல் வேட்டை மூன்று துப்பாக்கிகள் பறிமுதல்
நக்சல்கள் தேடுதல் வேட்டை மூன்று துப்பாக்கிகள் பறிமுதல்
ADDED : நவ 15, 2024 11:09 PM
சிக்கமகளூரு: நக்சல் எதிர்ப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மூன்று துப்பாக்கிகள், தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
சிக்கமகளூரின் கொப்பா, சிருங்கேரி தாலுகாக்களில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு, போலீசாருக்கு தகவல்கள் வந்தன. இதையடுத்து, ஏ.என்.எப்., எனும் நக்சல் எதிர்ப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிருங்கேரி பகுதியில் உள்ள வனப்பகுதியில் துப்பாக்கியுடன் ஆறு நபர்கள் சுற்றித் திரிந்ததாக தகவல் கிடைத்தது. சோதனையின்போது இருவர் கைது செய்யப்பட்டனர்.
கொப்பா தாலுகாவில் உள்ள கடேஹுன்டி கிராமத்தில், சுப்பே கவுடா என்பவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. நக்சல்கள் அங்கு சமைத்து சாப்பிட்டுவிட்டுச் சென்றது தெரிய வந்தது.
மூன்று துப்பாக்கிகள், தோட்டாக்கள் கைபற்றப்பட்டன. சுப்பே கவுடாவிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, ஜெயபுரா போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நக்சல்கள், ஜான் என்பவர் வீட்டுக்கு சென்று இருக்கலாம் என கருதப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு பின், இப்பகுதியில் மீண்டும் நக்சல் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐ.ஜி.பி., அமித் சிங், சி.ஐ.டி., - ஏ.டி.ஜி.பி., பிரணாப் மெஹந்தி, எஸ்.பி., விக்ரம் அமாத்தே ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.