‛இண்டியா' கூட்டணியில் இருந்து வெளியேறுகிறாரா நிதீஷ்குமார்?
‛இண்டியா' கூட்டணியில் இருந்து வெளியேறுகிறாரா நிதீஷ்குமார்?
UPDATED : ஜன 25, 2024 05:44 PM
ADDED : ஜன 25, 2024 03:54 PM

பாட்னா: ‛ இண்டியா' கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவரும், பீஹார் முதல்வருமான நிதீஷ்குமார் வெளியேறுவார் எனக்கூறப்படுகிறது.
‛ இண்டியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள மம்தா மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிட போவதாக அறிவிக்க, அவரை பின்பற்றி பஞ்சாபில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என பக்வந்த் மன் கூறி கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். தற்போது, அக்கூட்டணி உருவாக முக்கிய பங்கு வகித்த நிதீஷ்குமாரும் அணிமாறி பா.ஜ., கூட்டணிக்கு செல்வார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஏற்கனவே, தொகுதி பங்கீட்டில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக அதிருப்தியில் இருந்து வரும் அவர், ‛ இண்டியா ' கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பதவியையும் ஏற்க மறுத்து இருந்தார். அதற்கு முன்னர் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை புகழ்ந்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இச்சூழ்நிலையில், பீஹார் முன்னார் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு மத்திய அரசு பாரத் ரத்னா விருது அளித்து கவுரவித்தது. இது குறித்து பேசிய நிதீஷ்குமார், தாங்கள் கர்பூரி தாக்கூர் வழியை பின்பற்றி வருகிறோம் எனவும், குடும்பத்தினரை அரசியலில் முன்னிலைப்படுத்துவது கிடையாது என்ற அவரின் கொள்கைப்படி செயல்படுகிறோம் என தெரிவித்து இருந்தார்.
இது பற்றி பா.ஜ., எந்த கருத்தும் கூறாத நிலையில், நிதீஷின் கூட்டணி கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள், ரோகிணி ஆச்சார்யா சமூக வலைதளத்தில், ‛‛ சிலர் தங்களின் குறைகளை பார்க்காமல், மற்றவர்கள் மீது சேற்றை வாரி பூசுகின்றனர்'' எனப்பதிவிட்டு சில நிமிடங்களில் அதனை நீக்கினார். ஆனால், அந்த பதிவின் ‛ ஸ்க்ரீன்ஷாட் ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
அந்தப் பதிவில் அவர் யாரையும் நேரடியாக குறிப்பிடாவிட்டாலும், நிதீஷ்குமாரை தான் அவர் கூறுகிறார் என கருத்து எழுந்தது. இதுவும் நிதீஷ்குமாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது இரண்டு கட்சிகள் இடையே விரிசலை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாநிலத்தின் அரசியல் நிலவரம் குறித்து நிதீஷ்குமார், தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனால், நிதீஷ்குமார் அணிமாறக்கூடும் என தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.
இந்நிலையில், பீஹாரில் தனித்து ஆட்சி அமைக்க ராஷ்ட்ரீய ஜனதா தளத்திற்கு இன்னும் 8 எம்.எல்.ஏ.,க்கள் தான் தேவைப்படுகின்றனர். நிதீஷ்குமார் அணிமாறக்கூடும் என தகவல்கள் வெளியாகி வருவதால், தனித்து ஆட்சி அமைக்க ஏதுவாக மாற்று கட்சி எம்.எல்.ஏ.,க்களை இழுக்க லாலு தரப்பினர் முயற்சித்து வருவதாகவும், அதனை தடுக்க சட்டசபையை கலைக்க நிதீஷ்குமார் பரிந்துரை செய்யக்கூடும் எனவும் அம்மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சூழ்நிலையில், பீஹார் மாநில பா.ஜ., தலைவரும், மத்திய அமைச்சருமான அஸ்வினி குமாரும், பாட்னாவில் இருந்து டில்லிக்கு விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பங்கேற்க மாட்டார்
மணிப்பூர் முதல் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை வரை காங்., எம்.பி., ராகுல், பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த யாத்திரை வரும் 29ம் தேதி பீஹார் மாநிலத்திற்குள் நுழைகிறது. இதில் பங்கேற்கும்படி, அம்மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதீஷ்குமாருக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், ராகுலின் யாத்திரையில் நிதீஷ்குமார் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.