கன்னடர்கள் குறித்து தவறான கருத்து மன்னிப்பு கேட்ட வட மாநில பெண்
கன்னடர்கள் குறித்து தவறான கருத்து மன்னிப்பு கேட்ட வட மாநில பெண்
ADDED : செப் 25, 2024 07:33 AM

பெங்களூரு : கன்னடர்கள் குறித்து இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் விமர்சித்து பேசிய சுகந்த் சர்மா, மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார்.
பெங்களூரில் 'பிரீடம் கம்பெனி' என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் சுகந்த் சர்மா என்ற பெண், சில தினங்களுக்கு முன்பு, தனது இன்ஸ்டகிராமில், 'நாம் (வட மாநிலத்தவர்) இருப்பதால் தான் பெங்களூரு உள்ளது. நாம் வெளியேறிவிட்டால், கோரமங்களா பப்கள் உட்பட பெங்களூரு காலியாகிவிடும்' என, விமர்சித்து வீடியோ பதிவேற்றம் செய்திருந்தார்.
இவரின் வீடியோவுக்கு வட மாநிலத்தவர்கள் உட்பட பலரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். 'உதவி செய்யும் கையை கடிக்கக் கூடாது' என்றும்; வேலை தேடி பெங்களூரு வந்தவர் எதற்காக இங்கேயே இருக்குறீர்கள்? மாநிலத்தை விட்டு வெளியேறுங்கள்' என பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
கன்னட அமைப்பினர், 'சுகந்தா சர்மா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போராட்டம் நடத்தப்படும்.
பெங்களூரில் வேறு எந்த நிறுவனத்திலும் அவருக்கு பணி கொடுத்தால் போராட்டம் நடத்துவோம்' என எச்சரித்தனர். சுகந்தா சர்மா பணியாற்றி வந்த பிரீடம் நிறுவனம், அவரை பணியில் இருந்து நீக்கிவிட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் மீண்டும் தனது இன்ஸ்டாகிராமில், 'யாரையும் காயப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த வீடியோ எடுக்கவில்லை. அனைத்து மாநிலம், மொழி, கலாசாரத்தையும் மதிக்கிறேன். எனது வீடியோவால் கன்னடர்கள் மனது பாதிக்கப்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.