வி.ஐ.பி., இருக்கைக்காக அதிகாரிகள் குடும்பத்தினர் குஸ்தி
வி.ஐ.பி., இருக்கைக்காக அதிகாரிகள் குடும்பத்தினர் குஸ்தி
ADDED : மே 07, 2025 12:37 AM

பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில், கடந்த 3ல், ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில், பெங்களூரு - சென்னை அணிகள் மோதின; பெங்களூரு அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த போட்டியை, வி.ஐ.பி.,க்களுக்கான 'டைமண்டு பாக்ஸ்' என்ற இடத்தில், ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவரின் மகன் மற்றும் மகள் பார்த்தனர். போட்டியின் இடையே, அந்த அதிகாரியின் மகள் கழிப்பறைக்கு சென்றார். அப்போது இருக்கையில், தன் ஹேண்ட் பேக்கை அவர் வைத்து விட்டுச் சென்றார்.
திரும்பி வந்த போது, இருக்கையில் வேறொரு நபர் அமர்ந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஐ.பி.எஸ்., அதிகாரியின் மகள், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரது சகோதரரும் இணைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதே நேரத்தில், இருக்கையில் அமர்ந்த நபருக்கு ஆதரவாக, வருமான வரித்துறை கமிஷனரான அவரது மனைவியும், அவரது மகனும் குரல் கொடுத்தனர். இதனால் வாக்குவாதம் முற்றியது.
உதவிக்கு, ஐ.பி.எஸ்., அதிகாரியான தன் தந்தை மற்றும் தாயாரை, அந்த பெண் அழைத்தார். இரு தரப்புக்கு இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், வாக்குவாதம் நடந்த போது, பல மூத்த அரசு அதிகாரிகள் தலையிடாமல் வேடிக்கை பார்த்தனர்.
வருமான வரித்துறை அதிகாரி குடும்பத்தினர் மீது, பாலியல், மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில், ஐ.பி.எஸ்., அதிகாரி புகார் அளித்தார். பதிலுக்கு, வருமான வரித்துறை கமிஷனரும் புகார் அளித்தார். வி.ஐ.பி., இருக்கைக்காக அரசு அதிகாரிகளின் குடும்பத்தினர் மல்லுக்கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.