ADDED : பிப் 04, 2025 11:32 PM
பாலக்காடு; கோவில் திருவிழா அணிவகுப்பில் கலந்து கொள்ள வந்த, யானை மிரண்டு தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
கேரள மாநிலம், திருச்சூர் எளவள்ளியில் உள்ள பிரம்மகுளம் பைங்கன்னிக்கல் பகவதி அம்மன் கோவிலில், நேற்று நடந்த திருவிழா அணிவகுப்புக்கு, சிறக்கல் பகுதியில் இருந்து கணேஷ் என்ற யானையை அழைத்து வந்தனர்.
இந்நிலையில், கோவில் அருகே உள்ள குளத்தில் குளிப்பாட்டுவதற்காக யானையை இறக்கிய போது, திடீரென மிரண்டு பாகனை தாக்கி ஓடத் துவங்கியது.
அப்போது, கோவில் வளாகத்தில் விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்ய வந்த ஆழப்புழாவை சேர்ந்த ஆனந்த், 38, என்பவரை யானை தாக்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நான்கு கி.மீ., துாரத்துக்கு மிரண்டு ஓடிய யானையை கண்டாணச்சேரி என்ற இடத்தில், பாகான்கள் மற்றும் ஊர் மக்கள் சேர்ந்து கயிறால் கட்டி நிறுத்தினர். யானை தாக்கியதில் காயமடைந்த பாகன் ஒருவர் சாலக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.