பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் உள்நாட்டு மயமாக்கலுக்கு ஆப்பரேஷன் சிந்தூர் சிறந்த எடுத்துக்காட்டு: ராஜ்நாத் சிங் புகழாரம்
பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் உள்நாட்டு மயமாக்கலுக்கு ஆப்பரேஷன் சிந்தூர் சிறந்த எடுத்துக்காட்டு: ராஜ்நாத் சிங் புகழாரம்
ADDED : அக் 16, 2025 10:37 PM

புதுடில்லி: பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் உள்நாட்டு மயமாக்கலுக்கு ஆப்பரேஷன் சிந்தூர் சிறந்த எடுத்துக்காட்டு என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
புனேவில் நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:இந்தியாவின் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி ரூ.1.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி ரூ.46,000 கோடியிலிருந்து ரூ.1.5 லட்சம் கோடியாக உயர்ந்தது. இதில் ரூ.33,000 கோடி தனியார் துறையிலிருந்து வந்தது.
2029ம் ஆண்டுக்குள் ரூ.3 லட்சம் கோடியை இலக்காகக் கொண்டுள்ளோம். தன்னம்பிக்கை மற்றும் புதுமைகளில் கவனம் செலுத்தி வருகிறோம். மாணவர்கள் தங்களது கற்றல் திறனை வேலை தேடுவதற்கு மட்டும் பயன் படுத்தாமல் படைப் பாளர்களாக மாற வேண்டும். பாதுகாப்புத் துறையில் தன்னம்பிக்கை அடைய நாங்கள் பணியாற்றத் தொடங்கினோம்.
பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் உள்நாட்டு மயமாக்கலுக்கு ஆப்பரேஷன் சிந்தூர் சிறந்த எடுத்துக்காட்டு முதல் முறையாக, இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களில் பெரும் பகுதி இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. புனே கலாசாரம் மற்றும் தொழில்நுட்பத்தின் மையமாக இருக்கிறது. புனே பாரம்பரியத்தில் வேரூன்றியுள்ளது.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில், பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. நாட்டின் தன்னம்பிக்கை இலக்கை அடைய எந்த முயற்சிகளும் மேற்கொள்ள வில்லை. அதனை நாங்கள் மாற்றினோம். தற்போது எங்களது முயற்சிகளுக்கு பலன் கிடைத்து உள்ளது. உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது, நிச்சயமற்ற உலகில் திறமை மட்டுமே நிலைத்திருக்க உதவும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.