அயோத்தி ராமர் கோவில் கட்டிய கலைஞருக்கு பத்மஸ்ரீ: யார் இந்த சந்திரகாந்த் சோம்புரா?
அயோத்தி ராமர் கோவில் கட்டிய கலைஞருக்கு பத்மஸ்ரீ: யார் இந்த சந்திரகாந்த் சோம்புரா?
ADDED : ஜன 26, 2025 05:10 PM

புதுடில்லி: அயோத்தி ராமர் கோவில் கட்டிய கட்டிடக் கலைஞர் சந்திரகாந்த் சோம்புரா, பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டிற்கான பத்ம விருதுகள் 139 பேருக்கு மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதில் அயோத்தி கோவில் கட்டிய பிரபல கட்டிடக் கலைஞர் சந்திரகாந்த் சோம்புராவும் இடம்பெற்றுள்ளார்.
சந்திரகாந்த் சோம்புரா, 80, பிரபல கட்டிடக்கலைஞர் பிரபாஷங்கர்பாய் ஓகத்பாய் சோமபுராவின் பேரன். அவரும் பத்மஸ்ரீ விருது பெற்றவர் தான். அவரை அவர் தனது ஆசிரியராகவும் கருதுகிறார் சந்திரகாந்த்.
சந்திரகாந்துக்கு 1997ம் ஆண்டின் சிறந்த கட்டிடக் கலைஞர் விருது வழங்கப்பட்டது. லண்டனில் உள்ள ஸ்ரீ அக்சர் புருஷோத்தம் சுவாமி நாராயண் கோவிலை அவர் உருவாக்கியது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.மேலும், குஜராத் காந்திநகரில் உள்ள அக்சர்தாம் கோயில், 108 பக்திவிஹார் மற்றும் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் உள்ள பிரபல கோவில்களையும் அவர் உருவாக்கினார்.இவை அனைத்தும் பரவலான பாராட்டைப் பெற்றன.
அயோத்தி ராமர் கோயில் கட்டியது எப்படி என்பது பற்றி சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:
அயோத்தி ராமர் கோவிலை 30 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தன் மனதுக்குள் உருவாக்கி விட்டேன்.அப்போது இருந்த கட்டுப்பாடுகள் காரணமாக கோவில் வளாகத்துக்குள்
அளவிடும் டேப் பயன்படுத்த என்னை அனுமதிக்கவில்லை. எனது கால்தடங்களை அளவீட்டு அலகாகப் பயன்படுத்தி நீளம், அகலத்தை கணக்கிட்டேன்.
அந்தக் கணக்கை நினைவில் வைத்துக் கொண்டு, கோவிலை எப்படி வடிவமைக்க வேண்டும் என்று திட்டமிட்டு வைத்திருந்தேன்.
இப்படித்தான், அயோத்தியில் 2.7 ஏக்கர் பரப்பளவில் பாரம்பரிய நாகர் பாணியில் இரும்பைப் பயன்படுத்தாமல் கட்டப்பட்ட கோயிலைக் கற்பனை செய்தேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இடமிருந்து வலமாக, குறுக்கே உள்ள அனைத்து படிகளையும் நினைவில் வைத்துக் கொண்டேன் என்றும் தன் நினைவை பகிர்ந்து கொண்டு உள்ளார் சந்திரகாந்த்.
இவரது குடும்பத்தினர், பல தலைமுறைகளாக கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் புகழ்பெற்ற பல்வேறு கோவில்கள் இவர்களது வடிவமைப்பில் உருவானவை.
நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் குஜராத்தில் சோமநாதர் கோவில் புதுப்பித்து கட்டப்பட்டது. அந்தப் பணியை, தற்போது பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள சந்திரகாந்தின் தாத்தா சோம்புரா தான் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.