ADDED : மே 13, 2025 04:42 AM
ஜம்மு: போர் நிறுத்த அறிவிப்புக்குப்பின், ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் தாக்குதலை நேற்று அத்துமீறி நடத்தியதாக தகவல் வெளியானது.
ஜம்மு - காஷ்மீரின் சம்பா மாவட்டத்தை ஒட்டியுள்ள சர்வதேச எல்லைக்கு அருகே பாகிஸ்தானின் ட்ரோன்கள் நேற்றிரவு தாக்கியதாக தகவல் வெளியானது. எனினும், அவற்றை நம் பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக அழித்ததாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து, ஜம்மு - காஷ்மீரின் சம்பா, கதுவா, ரஜோரி, ஜம்மு உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறுகையில், 'ஜம்மு - காஷ்மீரின் சம்பா அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், சில ட்ரோன் தாக்குதல்கள் நடந்ததாக தெரியவந்துள்ளது. இதனால், மக்கள் அச்சப்படத் தேவையில்லை. தொடர்ந்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்' என, குறிப்பிட்டுள்ளன.
இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இண்டிகோ விமான நிறுவனம், எல்லையோர மாநிலங்களில் உள்ள நகரங்களுக்கான விமான சேவைகளை இன்று ரத்து செய்துள்ளது.