ADDED : ஜன 01, 2025 01:10 AM

மை-சூரு, கர்நாடகாவின் மைசூரில் உள்ள, 'இன்போசிஸ்' நிறுவனத்திற்குள் சிறுத்தை நுழைந்ததால், ஊழியர்கள், பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கர்நாடக மாநிலம், மைசூரு, அரண்மனை நகரில் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, 'இன்போசிஸ்' அமைந்துள்ளது. இது, வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.
நேற்று அதிகாலை நிறுவனத்தின் வளாகத்தில் சிறுத்தையை பார்த்ததாக சிலர் கூறினர். இந்த செய்தி ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
சிறுத்தை நடமாட்டம் குறித்து, நிறுவனம் சார்பாக வனத்துறைக்கு தகவல் அனுப்பப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், முதலில் சிறுத்தை உள்ளதா என ஆய்வு செய்தனர்.
கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, சிறுத்தை அதிகாலை 2:00 மணிக்கு சுற்றித்திரிந்தது தெரியவந்தது.
சிறுத்தை இருப்பது உறுதியானதால், ஊழியர்கள் அனைவரையும் வீட்டிலேயே இருந்து பணிபுரியும் படி நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது.
இன்று நடக்க இருந்த பயிற்சிகள், மீட்டிங் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன. 2011ல் ஆண்டு, சிறுத்தை ஒன்று நிறுவனத்திற்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.
காப்பு காடுக்கு அருகில் நிறுவனம் உள்ளதால், சிறுத்தைகள் உணவு தேடி நிறுவனத்திற்குள் நுழைவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், அப்பகுதியை சுற்றி உள்ள பொது மக்களும் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் தீவிரமாக சிறுத்தையை தேடி வருகின்றனர்.

