" மக்கள் என்னை அழைக்கின்றனர் " - ராபர்ட் வாத்ராவுக்கு இப்படியும் நினைப்பு
" மக்கள் என்னை அழைக்கின்றனர் " - ராபர்ட் வாத்ராவுக்கு இப்படியும் நினைப்பு
ADDED : ஏப் 27, 2024 12:15 PM

புதுடில்லி: ‛‛ தீவிர அரசியலில் ஈடுபடும்படி நாட்டு மக்கள் அனைவரும் என்னை அழைக்கின்றனர்'' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் உ.பி.,யின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை. அமேதி தொகுதியில் போட்டியிட பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா விருப்பம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நிருபர்களிடம் ராபர்ட் வாத்ரா கூறியதாவது: நாடு முழுவதும் இருந்து எனக்கு அழைப்பு வருகிறது. நான் எப்போதும் மக்களுடன் இருப்பதால், தீவிர அரசியலில் ஈடுபடும்படி மக்கள் கூறுகின்றனர். தங்கள் பகுதியில் இருக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர். 1999 முதல் அமேதி தொகுதியில் பிரசாரம் செய்து வருகிறேன். அத்தொகுதியின் தற்போதைய எம்.பி., ஸ்மிருதி இரானி எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில் பாஜ.,வை விட காங்கிரசுக்கு அதிக வரவேற்பு உள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் பா.ஜ.,வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என முடிவு செய்துவிட்டனர். ராகுல் மற்றும் பிரியங்காவின் கடின உழைப்பை பார்த்துள்ள மக்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்வாறு ராபர்ட் வாத்ரா கூறினார்.

