கெஜ்ரிவாலுக்கு மக்கள் பாடம் பா.ஜ., - எம்.பி., கார்ஜோள் காட்டம்
கெஜ்ரிவாலுக்கு மக்கள் பாடம் பா.ஜ., - எம்.பி., கார்ஜோள் காட்டம்
ADDED : பிப் 09, 2025 06:58 AM

விஜயபுரா: டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி குறித்து, சித்ரதுர்கா பா.ஜ., - எம்.பி., கோவிந்த் கார்ஜோள் நேற்று விஜயபுராவில் கூறியதாவது:
டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதற்கு காரணமாக இருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். கடந்த பத்து ஆண்டுகளாக கெஜ்ரிவால் தவறான ஆட்சி நடத்தினார். சிறைக்கு சென்றபோதும், வெட்கமின்றி ஆட்சி செய்த அவர், அரசியலமைப்பிற்கு எதிரானவர்.
டில்லி ஒரு பெரிய நகரம். இங்கு மற்ற மாநிலங்களை போன்று அதிக பொறுப்புகள் மாநில அரசுக்கு கிடையாது. இருப்பினும் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும். இதை கெஜ்ரிவால் கொள்ளை அடித்துள்ளார்.
இலவச திட்டங்கள் கொண்டு வருவதாக கூறி டில்லி, பஞ்சாபில் ஆட்சியை பிடித்தது. இது நாட்டிற்கு மோசமான முன்னுதாரணமாகும்.
டில்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் மோசமான தோல்வியை சந்தித்து உள்ளது. ராகுல், சோனியா, பிரியங்கா என சர்வாதிகாரிகளின் கீழ் காங்கிரஸ் இருக்கும் வரை கட்சி வளராது; அழிந்து விடும்.
பா.ஜ., ஒரு தாய் போன்றது; கட்சி தலைமையின் முடிவே இறுதியானது. கர்நாடகா பா.ஜ.,வை ஒழுங்குபடுத்துவதற்கு கட்சியின் மூத்த தலைவர்கள் விரைவில் நடவடிக்கை எடுப்பர். கட்சி விதிகளுக்கு உட்பட்டு மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

