ADDED : நவ 20, 2024 02:14 AM
சபரிமலை:சபரிமலையில் 18 படி ஏறி வரும் பக்தர்களை நேரடியாக சன்னிதிக்கு அனுப்பி கூடுதல் தரிசன வசதி செய்வதற்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆலோசித்து வருகிறது.
தற்போது 18 படி ஏறி வரும் பக்தர்கள் இடது பக்கமாக திரும்பி மேம்பாலம் ஏறி நீண்ட நேரம் காத்திருந்து சுற்றி வந்து மூலவரை தரிசனம் செய்ய வேண்டும்.
அதிலும் நேரடியாக பார்க்காமல் வலதுபுறம் திரும்பி, சில வினாடிகள் மட்டுமே தரிசிக்க முடியும். கூட்ட நேரத்தில் போலீசார் பக்தர்களை தள்ளி விடும்போது பலருக்கு தரிசனம் கிடைக்காத சூழ்நிலையும் இருக்கிறது.
இதை தவிர்த்து மாற்று வழி ஏற்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதை ஏற்று, 18 படியேறி வரும் பக்தர்களை, கொடி மரத்தின் பக்கவாட்டில் நேரடியாக கிழக்கு வாசல் வழியாக உள்ளே அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. கிழக்கு வாசலில் நுழைந்ததுமே மூலவர் தெரிவார். பக்தர்கள் கூடுதல் நேரம் மூலவரை தரிசிக்க முடியும்.
தரிசனம் முடிந்த பக்தர்கள் சன்னிதியின் பின்புறம் வழியாக உள்ள பாலத்தில் மாளிகைபுறம் கோவிலுக்கு சென்று தரிசனம் முடித்து, 'பெய்லி' பாலம் வழியாக பம்பைக்கு திருப்பி அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் இதற்கான சாத்தியம் குறித்து நேற்று ஆய்வு நடத்தினார்.
சோதனை அடிப்படையில் இந்த மாற்றத்தை அமல்படுத்தி பார்த்த பின், கேரள உயர் நீதிமன்றம், அரசு, மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும்.
சிறப்பு தரிசன ஏற்பாடு
சபரிமலையில் 18 படிகளில் ஏறி வரும் முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பம்பையில் இருந்து மலையேறி, 5 கி.மீ., நடந்து சன்னிதானத்துக்கு வரும் பக்தர்கள் 18 படிகளில் ஏறிய பின், பிளை ஓவரில் கியூ நின்று தான் அய்யப்பனை தரிசிக்க வேண்டும். இவ்வாறு நிற்கும் போது சிறுவர், சிறுமியரை அழைத்து வருபவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுகின்றனர்.
இதை கருதி, அவர்களுக்காக சன்னிதானம் பெரிய நடைப்பந்தலில் தனியாக ஒரு வரிசை ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல, 18 படிகளில் ஏறியதும் கொடி மரத்தின் வலது பக்கம் வழியாக சென்று இதற்காக அமைக்கப்பட்ட தனி கேட் வழியாக, முதல் வரிசையில் தரிசனத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.
இது, மிகவும் வசதியாக இருக்கிறது என்று இந்த வரிசையில் சென்று, அய்யப்பனை தரிசித்து வந்த பக்தர்கள் தெரிவித்தனர்.