ரூ.35,440 கோடியில் விவசாய திட்டங்கள்: பிரதமர் மோடி துவக்கி வைப்பு
ரூ.35,440 கோடியில் விவசாய திட்டங்கள்: பிரதமர் மோடி துவக்கி வைப்பு
ADDED : அக் 11, 2025 11:37 PM

புதுடில்லி: பிரதமர் மோடி 35,440 கோடி ரூபாய் மதிப்பில் விவசாயிகளுக்கான தன தான்ய கிரிஷி மற்றும் பயறு வகை உற்பத்தியில் தன்னிறைவு ஆகிய இரண்டு திட்டங்களை நேற்று துவங்கி வைத்தார்.
டில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கான திட்டத்தை பிரதமர் துவக்கினார்.
தன தான்ய கிரிஷி இதில், 24,000 கோடி ரூபாய் மதிப்பிலான பிரதம மந்திரி தன தான்ய கிரிஷி திட்டம், 11,400 கோடி ரூபாய் மதிப்பிலான பயறு உற்பத்தியில் தன்னிறைவு திட்டம் துவங்கி வைக்கப்பட்டது.
மேலும், விவசாயம், கால்நடை, மீன் வளம், உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் 5,450 கோடி ரூபாய் மதிப்பு திட்டங்களை துவக்கினார். 815 கோடி ரூபாய் மதிப்பிலான கூடுதல் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பிரதம மந்திரி, 'தன தான்ய கிரிஷி' திட்டம் நாட்டில் உள்ள, 100 பின்தங்கிய வேளாண் மாவட்டங்களை மாற்றும் நோக்கத்துடன் செயல்படும்.
பயறு அவசியம் இதில், பயிர் விளைச்சல் மேம்பாடு, பயிர் வகை மாற்றம், பாசன வசதிகள், சேமிப்பு கட்டமைப்புகள் மற்றும் எளிதான கடன் வசதி போன்ற அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பயறு வகை உற்பத்தியில் தன்னிறைவு என்ற திட்டத்தின் கீழ் 2030க்குள், பயறு உற்பத்தி பரப்பை, 85 லட்சம் ஏக்கராக அதிகரிப்பது, பயறு உற்பத்தி அளவை தற்போதைய 252 லட்சம் டன்னிலிருந்து 350 லட்சம் டன்னாக உயர்த்துவது போன்ற இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.
திட்டங்களை துவக்கி வைத்த பின் பிரதமர் மோடி பேசியதாவது:
நம் விவசாயிகள், 2047க்குள் 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற கனவை நிறைவேற்றுவதில் முக்கிய பங்காற்றுவர். அதற்காக வேளாண் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம்.
உள்நாட்டு தேவைகளையும், உலகளாவிய தேவைகளையும் பூர்த்தி செய்யும் அளவுக்கு நம் வேளாண் துறை வலுவடைய வேண்டும். தற்போது துவங்கி வைத்த இரண்டு பெரும் விவசாய திட்டங்கள் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றியமைக்கும்.
ஏற்றுமதி இரட்டிப்பு முந்தைய காங்கிரஸ் அரசு, விவசாயத் துறையை புறக்கணித்தது. அவர்களுக்கு விவசாய வளர்ச்சியில் எந்தத் தொலைநோக்கு திட்டமும் இல்லை.
ஆனால் நாங்கள் கடந்த, 11 ஆண்டுகளில், விதையிலிருந்து சந்தை வரை பல சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளோம்.
எங்கள் ஆட்சியில் விவசாய ஏற்றுமதி இரட்டிப்பாகியுள்ளது. சமீபத்தில் குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., விகிதங்களால், டிராக்டர் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களின் விலை குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.