அசாமில் வெவ்வேறு மதத்தினர் இடையே நிலம் வாங்க போலீஸ் அனுமதி அவசியம்
அசாமில் வெவ்வேறு மதத்தினர் இடையே நிலம் வாங்க போலீஸ் அனுமதி அவசியம்
ADDED : ஆக 29, 2025 12:43 AM

குவஹாத்தி: அசாமில், இருவேறு மதத்தினருக்கு இடையிலான நில பரிவர்த்தனைகளுக்கு சிறப்புப் பிரிவு போலீசாரின் அனுமதி அவசியம் என்பதை வலியுறுத்தும் நிலையான செயல்பாட்டு நடைமுறைக்கு, அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா-.ஜ-., ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, ஹிந்து, முஸ்லிம் உட்பட பல்வேறு மதத்தினர் வசிக்கின்றனர்.
கட்டுப்பாடு பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கு வந்து நிலம் வாங்குவதால் மாநில பாதுகாப்பு, சமூக ஒற்றுமை மற்றும் மக்கள் தொகை விகிதத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, இருவேறு மதத்தினர் இடையே நடக்கும் நில பரிவர்த்தனைகளுக்கு மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, இனி வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் நிலம் வாங்க, சிறப்புப் பிரிவு போலீசாரின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வகுக்க மாநில அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து அமைச்சரவை வெளியிட்ட அறிக்கை:
வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் நிலங்களை வாங்குவதால் வகுப்புவாத நல்லிணக்கம் மற்றும் தேசிய பாதுகாப்பில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. பல இடங்களில் மோசடி செயல்களும் அரங்கேறி வருகின்றன.
இதனால், மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் நிலங்களை வாங்க போலீசாரின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நிலங்கள் தொடர்பான விபரங்களை சரிபார்க்கும் சிறப்புப் பிரிவு போலீஸ் குழு, உரிய ஆய்வுக்கு பின் அனுமதி வழங்கும்-. இதனால், சொத்துக்களை விற்பதால், வாங்குவதால் ஏற்படும் பிரச்னைகள் குறையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒப்புதல் இது குறித்து முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறுகையில், 'அசாம் போன்ற உணர்திறன் வாய்ந்த மாநிலத்தில், இரு மதக் குழுக்களுக்கு இடையே நிலங்களை மாற்றுவது கவனமாக கையாளப்பட வேண்டும். இந்த விவகாரம், அசாம் போலீசின் சிறப்பு பிரிவு ஆராய்ந்து ஒப்புதல் அளித்த பின்னரே, இதற்கான அனுமதி இனி வழங்கப்படும்.
'அமைச்சரவையின் இந்த முடிவு, மாநிலத்தில் நில உரிமை செயல்பாடுகளை நெறிப்படுத்தும். வெளிமாநிலங்களில் இருந்து வந்து அசாமில் நிலம் வாங்க முயலும் தொண்டு நிறுவனங்களுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும்' என்றார்.