ADDED : அக் 16, 2024 10:31 PM

சிக்கபல்லாபூர் : தொடர் மழையால், மாதுளை பழங்களை அறுவடை செய்ய முடியாமல், விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
சிக்கபல்லாபூர் மாவட்டத்தில், நான்கு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விளைச்சல்களை பாதுகாக்க முடியாமல், விவசாயிகள் பரிதவிக்கின்றனர். வெள்ளத்தில் பயிர்கள் அடித்து செல்லப்படுகின்றன.
பல்வேறு கிராமங்களில், விவசாயிகள் மாதுளை பயிரிட்டிருந்தனர். போதுமான மழை பெய்ததால், தோட்டங்களில் அமோகமாக விளைந்துள்ளது. செடிகளில் பழங்கள் காய்த்து தொங்குகின்றன. அறுவடைக்கு விவசாயிகள் தயாராகினர்.
ஆனால் நான்கு நாட்களாக, தொடர்ந்து மழை பெய்வதால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவிக்கின்றனர். சரியான நேரத்தில் அறுவடை செய்யாததால், தோட்டத்திலேயே பழங்கள் உதிர்ந்து விழுகின்றன.
மாதுளையை அறுவடை செய்து, விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
கடனை அடைக்கலாம் என, விவசாயிகள் நினைத்திருந்தனர். இப்போது எப்படி கடனை அடைப்பது என, தெரியாமல் கண்ணீர் விடுகின்றனர்.