ADDED : ஜூலை 18, 2026 10:08 PM

தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகி, த.வெ.க., அரசில் காங்., பங்கெடுத்த பின், தமிழக முதல்வர் விஜயும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும் அடிக்கடி பேசிக் கொள்கின்றனர். இரு வாரங்களுக்கு மேல் வெளிநாடு சென்று டில்லி திரும்பினார் ராகுல். வந்தவுடன் அவர் செய்த முதல் காரியம்,- டில்லி பிரதிநிதியாக தமிழகத்தில் பிரவீன் சக்ரவர்த்தியை நியமனம் செய்தது தான். 'இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், காங்கிரசின் டில்லி பிரதிநிதி பிரவீன் தான்' என்கின்றனர் காங்., தலைவர்கள்.
சமீபத்தில், காங்., ஆலோசனைக் கூட்டம் நடந்த போது, பிரவீன் சக்ரவர்த்தியின் மொபைல் போனில், 'அடுத்த மாதம் நடக்கும், 'இண்டி' ஆலோசனைக் கூட்டத்தில் நீங்கள் பங்கேற்க வேண்டும்' என, விஜயிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் ராகுல். 'இண்டி கூட்டணியில் தி.மு.க., உள்ளவரை நாங்கள் வர மாட்டோம்' என, கறாராக சொல்லி விட்டாராம் விஜய். சமீபத்தில், காங்கிரசைச் சேர்ந்த கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா சென்னை வந்து, முதல்வர் விஜயை சந்தித்து, கேரளாவின் போதை பொருள் தடுப்பு கூட்டத்தில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்தார். இதன் பின்னணியில் ராகுலின் திட்டம் உள்ளது.
தென் மாநிலங்களில் காங்., ஆட்சி செய்யும் முதல்வர்கள் கேரளா -சதீஷன், தெலுங்கானா- ரேவந்த் ரெட்டி, கர்நாடகா -சிவகுமார் ஆகிய மூவருடன், தமிழக முதல்வர் விஜயும் இணைந்து செயல்பட விரும்புகிறார் ராகுல். 2029 பார்லி., தேர்தலில், இந்த மாநிலங்களில் விஜய் பிரசாரம் செய்தால் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது ராகுலின் திட்டம். ஆனால், மேகதாது அணை விவகாரத்தில், தமிழகம் - கர்நாடகா இடையே பிரச்னை புகைந்து கொண்டிருக்கும் நிலையில், கர்நாடகாவில் காங்கிரசுக்கு விஜய் பிரசாரம் செய்வாரா?
***
தி.மு.க.,வுக்கு எதிராக காங்., அணுகுண்டு?
பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் நாளை துவங்குகிறது. இதில், தமிழக அரசியல் நிலை பார்லி.,யில் பிரதிபலிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க., - எம்.பி.,க்கள் குறைந்தபட்சம் மூன்று பேராவது, இரு சபைகளிலும் அலுவல்கள் நடக்கும் போது இருக்க வேண்டும் என, கட்சி உத்தரவிட்டு உள்ளதாம்.
லோக்சபாவில், தி.மு.க.,வுக்கு எதிராக காங்., ஏதாவது பிரச்னையை எழுப்பினால், உடனடியாக தி.மு.க., - எம்.பி.,க்கள் பதிலடி கொடுக்க தயாராக உள்ளனர். அதே போல ராஜ்யசபாவிலும் தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் தயாராக உள்ளன.
த.வெ.க.,வுக்கு பார்லிமென்டின் இரு சபைகளிலும் ஒரு எம்.பி., கூட கிடையாது. இதனால் அக்கட்சிக்கு ஆதரவாக காங்., செயல்பட உள்ளது. ராஜ்யசபாவில் அ.தி.மு.க., - எம்.பி., இன்பதுரை தமிழக பிரச்னைகளை எழுப்ப, 10க்கும் மேற்பட்ட நோட்டீஸ் கொடுத்துள்ளார். தி.மு.க., இதற்கு பக்கபலமாக இருக்கும்.
த.வெ.க., ஆதரவில் ராஜ்யசபாவில் காங்., - எம்.பி., பதவி பெற்றவர் பிரவீன் சக்ரவர்த்தி. முதல்வர் விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர். த.வெ.க.,வின் கேடயமாக அங்கு அவர் செயல்பட உள்ளார். சிதம்பரம் தி.மு.க., ஆதரவாளர். எனவே, தி.மு.க.,வுக்கு எதிராக பிரவீன் சக்ரவர்த்தி களமிறங்கப் போகிறார். 'ஆகஸ்டில் தி.மு.க.,வுக்கு எதிராக ஒரு பெரிய அணுகுண்டை பார்லி.,யில் வீசப்போகிறேன்' என, சொல்லி வருகிறார் பிரவீன். இது தி.மு.க.,வினரை கலங்கடித்து வருகிறது.
**
எந்த பக்கம் போவது?
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவிலிருந்து பிரிந்து, இப்போது உண்மையான சிவசேனா என, தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் தலைவரான ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக உள்ளார். அதே போல, சரத் பவாரின் கட்சியும் இரண்டாக உடைந்து விட்டது. பவாரின் உறவினரான அஜித் பவாரின், தேசியவாத காங்., தான் உண்மையான கட்சி என, தேர்தல் கமிஷனும் அறிவித்து விட்டது. துணை முதல்வரான அஜித் பவார், விமான விபத்தில் பலியாகவே, அவரது மனைவி சுநேத்ரா இப்போது துணை முதல்வராக உள்ளார்.
இந்நிலையில், தன் கட்சியை யாருடன் இணைப்பது என்கிற ஆலோசனையிலும், குழப்பத்திலும் உள்ளார் சரத் பவார். காங்கிரசில் இருந்த பவார், 1999ல், சோனியா வெளிநாட்டவர் எனக்கூறி, அக்கட்சியில் இருந்து விலகி தேசியவாத காங்., என்ற தனிக்கட்சியை துவங்கினார்.
தன் மகள் சுப்ரியா சுலேவுக்கு எந்த கட்சி நல்ல எதிர் காலத்தை தருகிறதோ, அந்த கட்சியில் இணைய அவர் முயற்சி செய்கிறார். ஒன்று,- காங்கிரசில் இணைவது. தன் கட்சியினருக்கு முக்கிய பதவிகளான, மஹாராஷ்டிரா மாநில காங்., தலைவர் பதவி மற்றும் துணை தலைவர் பதவி வேண்டும். இரண்டாவது,- பா.ஜ., கூட்டணியில் இணைந்து விடுவது. அப்போது, தன் மகளுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும். மூன்றாவது, ஏக்நாத் ஷிண்டேவின் கட்சியில் இணைவது. அதன் மூலம், மாநிலத்தில் அமைச்சர் பதவிகள் கிடைக்கும்.
இந்த மூன்று திட்டங்களையும் சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசித்து வருகிறார் சரத் பவார். பவாரின் திட்டத்தை பரிசீலித்து வருகிறார் ராகுல். ஆனால், மஹாராஷ்டிரா காங்., தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'சரத் பவாரின் கட்சி இணைந்தால், அந்த கட்சி பிரமுகர்கள் ஆதிக்கம் செலுத்த துவங்கி விடுவர். அத்துடன், அவரது மகளும், 'பவர்புல்' ஆகி விடுவார்' என காங்., தலைவர்கள் ராகுலிடம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, சரத் பவாரும், ஏக்நாத் ஷிண்டேவும் சந்தித்து பேசி உள்ளனர். இன்னொரு பக்கம் சரத் பவாருக்கு நெருங்கிய கட்சி தலைவர் பா.ஜ., மூத்த தலைவர்களுடன் பேசி உள்ளார். இப்படி எந்த பக்கம் ஆதாயம் கிடைக்கிறதோ, அந்த பக்கம் செல்ல தயாராக உள்ளார் சரத் பவார். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என, பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி சொன்னது தான் நினைவிற்கு வருகிறது.
***
கேபினட் செயலரின் 'அட்வைஸ்!'
கேபினட் செயலராக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி டி.வி.சோமநாதன் ஆகஸ்ட் இறுதியில் ஓய்வு பெறுகிறார். அதற்கு முன், ஒரு நல்ல விஷயத்தை செய்துள்ளார் அவர். அனைத்து மாநில செயலர்களுக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என, ஒரு விலாவாரியான பட்டியலை கடிதம் வாயிலாக எழுதி சொல்லியிருக்கிறார்.
அதில் முக்கியமான ஒன்று, ஆலோசனை கூட்டங்களை எப்படி நடத்துவது, எவ்வளவு நேரம் இந்த கூட்டம் நடக்கலாம் என கூறியுள்ளார். எந்த ஒரு கூட்டமும் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை மட்டுமே நடத்த வேண்டும். பல ஆலோசனை கூட்டங்கள் தாமதமாக துவங்கி, நெடுநேரம் வர நடக்கின்றன. இதனால் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தங்கள் துறைகளின் வேலைகளை செய்ய முடியாமல் போய் விடுகிறது. அத்துடன், இந்த கூட்டங்களில் எந்தவித முடிவுகளும் எடுப்பதும் இல்லை. அரசு நிர்வாகத்தை எப்படி ஒழுங்காக நடத்த வேண்டும் என்பதற்கான அறிவுரைகளை இந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார் சோமநாதன்.
இந்தாண்டு நாடு முழுதும், 300 மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும், பல மாநில தலைமை செயலர்களும் ஓய்வு பெறுகின்றனர். உ.பி.,யில் மட்டும், 30க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஓய்வு பெறுகின்றனர். புதிதாக பதவியேற்கும் அதிகாரிகளுக்கு வசதியாக இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார் சோமநாதன்.
இவர், பிரதமர் மோடிக்கு நெருக்கம். நிதித்துறை செயலராக இருந்த இவரை, கேபினட் செயலராக்கினார் மோடி. எனவே, இவருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
தொடர்புக்கு: ndussh@dinamalar.in
