ADDED : ஜன 20, 2025 07:16 AM

பெங்களூரு: கர்நாடகாவில் பெங்களூரு உட்பட பல பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது.
பெங்களூரில் கடந்த சில வாரங்களாக குளிர் வாட்டி எடுத்தது. இதன் காரணமாக மக்கள் பலரும் இரவு நேரங்களில் வெளியில் வருவதை தவிர்த்தனர். இந்நிலையில் பெங்களூரில் உள்ள எம்.ஜி., சாலை, ஜெயநகர், சிவாஜி நகர், குயீன்ஸ் சாலை, ஹலசூரு, ஆர்.ஆர்., நகர், இந்திரா நகர் ஆகிய பல இடங்களில் நேற்று அதிகாலை முதல் மாலை வரை லேசான மழை பெய்தது.
குளிர் காலத்தில் மழை பெய்ததால், மக்கள் பலரும் ஆச்சிரியம் அடைந்தனர். இந்த ஆண்டின் பெய்த முதல் மழையை மக்கள் வரவேற்றனர்.
இந்நிலையில் இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கர்நாடகாவில் பெங்களூரு உட்பட தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்யக்கூடும். வட மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
'மாநிலம் முழுதும் குளிரின் அளவு அதிகமாக இருக்கும். மேலும், பெங்களூரில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்சம் 16 டிகிரி செல்சியசாகவும் இருக்கும். மேலும் வரும் நாட்களில் பீதர், கலபுரகி, ராய்ச்சூர் மாவட்டங்களில் கடும் குளிர் நிலவும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.