'பைக் டாக்சி'யை எதிர்த்த அமைச்சர் மகனின் நிகழ்ச்சிக்கு 'ராபிடோ' நிதி உதவி
'பைக் டாக்சி'யை எதிர்த்த அமைச்சர் மகனின் நிகழ்ச்சிக்கு 'ராபிடோ' நிதி உதவி
ADDED : ஆக 09, 2025 12:36 AM

மும்பை : மஹாராஷ்டிராவில், 'ராபிடோ' நிறுவனம் சட்ட விரோதமாக, 'பைக் டாக்சி' இயக்கியதை கண்டுபிடித்து அறிவுரை வழங்கிய போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக்கின் மகன் நடத்தும் நிகழ்ச்சிக்கு, அந்நிறுவனமே நிதியுதவி அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு சிவசேனாவைச் சேர்ந்த பிரதாப் சர்நாயக், போக்குவரத்து துறை அமைச்சராக உள்ளார்.
தலைநகர் மும்பையில், பைக் டாக்சிகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், ராபிடோ நிறுவனம் சட்ட விரோதமாக பைக் டாக்சி சேவை அளிப்பதாக அரசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேரடியாக களத்தில் இறங்கிய போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக், வேறொரு பெயரில், ராபிடோ செயலியில் பைக் டாக்சி பயணத்துக்கு புக் செய்தார்.
பத்து நிமிடங்களில் வந்த டிரைவர், அமைச்சரை கண்டு திகைத்துப்போனார்.
அந்த டிரைவருக்கு அறிவுரை கூறி அமைச்சர் அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வுகளை வீடியோ எடுத்து, அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
இந்நிலையில், அமைச்சர் பிரதாப் சர்நாயக்கின் மகன் புர்வேஷ், 'புரோ கோவிந்தா லீக்' என்ற பெயரில் உறியடி போட்டிகளை நடத்துகிறார். இந்த போட்டிக்கு, ராபிடோ நிறுவனம் முக்கிய ஸ்பான்ஸராக இருப்பது, தற்போது விவாதத்தை எழுப்பி உள்ளது.
இது குறித்து, காங்., மூத்த தலைவர் விஜய் வடெட்டிவார் கூறுகையில், முறைகேட்டை கண்டுபிடித்து, அதன் வாயிலாக மகனின் நிகழ்ச்சிக்கு நிதியுதவி வழங்கும்படி அமைச்சர் பிரதாப் சர்நாயக், 'ராபிடோ' நிறுவனத்தை வற்புறுத்தினாரா என்பது தெரியவில்லை,” என்றார்.
புரோ கோவிந்தா லீக் தொடர் துவங்கியதில் இருந்தே ராபிடோ தான் முக்கிய ஸ்பான்ஸராக இருந்து வருகிறது. என் மகனின் நிகழ்ச்சிக்கு நிதியுதவி அளிக்கும் நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததற்கு பாராட்ட வேண்டுமே தவிர, அவதுாறு பரப்பக் கூடாது. பிரதாப் சர்நாயக் போக்குவரத்து துறை அமைச்சர், சிவசேனா