சிசுவை சுமந்த கர்ப்பப்பையில் பெரிய பந்து அளவு கட்டி அகற்றம்
சிசுவை சுமந்த கர்ப்பப்பையில் பெரிய பந்து அளவு கட்டி அகற்றம்
ADDED : ஆக 27, 2025 11:28 AM
புதுடில்லி: டில்லியைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு, கருப்பையில் இருந்த பெரிய பந்து அளவிலான கட்டி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. தொடர் சிகிச்சைக்கு பின், அந்த பெண், ஆரோக்கியமான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
டில்லியைச் சேர்ந்த, 24 வயது பெண்ணுக்கு, ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. அந்த பெண் கர்ப்பமானார். 14வது வார கர்ப்பத்தின் போது, அந்த பெண்ணின் கருப்பையில் கட்டி இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர்.
அந்த கட்டி, பெரிய பந்து அளவில் இருந்தது. இதையடுத்து அவர், துவாரகா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல கட்ட சோதனைகளுக்கு பின், கருப்பையில் இருந்த சிசுவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல், அந்த கட்டியை அறுவை சிகிச்சை வாயிலாக டாக்டர்கள் அகற்றினர்.
அந்த கட்டியின் பாதிப்பு கருப்பை உள்ளிட்ட, உடலின் மற்ற பகுதிகளுக்கு மேலும் பரவாமல் தடுக்கும் வகையிலும், சிசுவுக்கு எந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையிலும், டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அதற்கான சிகிச்சையும் அளித்து வந்தனர்.
இந்நிலையில், அந்த பெண்ணுக்கு சமீபத்தில் அழகான, ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது.
இது குறித்து தனியார் மருத்துவ மனையின் டாக்டர் சரிதா குமாரி கூறியதாவது:
கர்ப்பத்தின் போது, கருப்பையில் கட்டி இருப்பது என்பது மிகவும் அரிதான விஷயம். உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து, அந்த கட்டியை அகற்றினோம். மிகவும் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்த குழந்தை ஆரோக்கியமாக உள்ளது.
உரிய நேரத்தில் நோயை கண்டறிந்து, அதற்கு தகுந்த சிகிச்சை அளித்தால், எந்தவிதமான நோயையும் குணப்படுத்தலாம் என்பதற்கு, இந்த பெண், சரியான முன் உதாரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.