ADDED : டிச 06, 2025 02:07 AM
திருவனந்தபுரம்: ஆலப்புழா அருகே கொக்கைன் உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தியதாக, வருவாய் ஆய்வாளர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவில் போதை பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு ஆலப்புழா அருகே உள்ள மாராரிக்குளம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு காரில் வந்தவர்களிடம் போலீசார் நடத்திய சோதனையில், 20 கிராம் கொக்கைன், நான்கு எல்.எஸ்.டி., ஸ்டாம்புகள் கைப்பற்றப்பட்டன.
தொடர்ந்து, மூவர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், அவர்கள் ஆலப்புழாவை சேர்ந்த சஜேஷ், 59, கோட்டயத்தைச் சேர்ந்த ஆபிரகாம் மேத்யூ, 56, கோழிக்கோட்டைச் சேர்ந்த அமல் தேவ், 26, என, தெரிய வந்தது.
சஜேஷ் ஆலப்புழா மாவட்ட தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். அவர்கள் ஆலப்புழா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

