ADDED : நவ 05, 2024 07:17 PM

புதுடில்லி: நடப்பு 2024-25 ல் காரிப் பருவத்தில் (ஜூலை முதல் ஜூன் வரை) இந்திய அரிசி உற்பத்தி 11 கோடியே 99 லட்சத்து 20 ஆயிரம் டன்னை தொட்டுவிடும் என வேளாண்துறை அமைச்சகம் கணித்துள்ளது.
வேளாண்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டின் அரிசி உற்பத்தியானது, கடந்த காரிப் பருவத்தை காட்டிலும் 66 லட்சத்து 70 ஆயிரம் டன் கூடுதலாகி உள்ளது. இதனால் அரசின் குடோன்களில், அரிசி இருப்பு தேவைக்கும் அதிகமாகவே இருக்கிறது.
நாடு முழுவதும் தற்போது காரிப் பருவ அறுவடை நடந்து வருகிறது. சோளம் உற்பத்தி கடந்த ஆண்டு 2 கோடியே 22 லட்சத்து 40 ஆயிரம் டன்னாக இருந்தது. அது தற்போது 2 கோடியே 45 லட்சத்து 40 ஆயிரம் டன்னாக உயர்ந்துள்ளது.
உணவு தானிய உற்பத்தி கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், 15.57 கோடி டன்னிலிருந்து 16.47 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
பருப்பு வகைகள் உற்பத்தி கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் ஒரே மாதிரியான நிலையிலும் இருக்கிறது. எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, கடந்த ஆண்டு 2 கோடியே 41லட்சத்து 60 ஆயிரம் டன்னாக இருந்தது. தற்போது அது 2 கோடியே 57 லட்சத்து 40 ஆயிரம் டன்னாக உயர்ந்துள்ளது.

