UPDATED : அக் 24, 2026 02:46 PM
ADDED : அக் 24, 2026 02:44 PM
புதுடில்லி: ரிக்ஷா டிரைவரை கத்தியால் குத்திக் கொலை செய்தவரை போலீசார் தேடுகின்றனர்.
டில்லி, ஜஹாங்கீர்புரியில் வசித்தவர் ரஞ்சித் சிங்,30. ரிக்ஷா ஓட்டி வந்தார். சம்பவத்தன்று இரவு, 11:00 மணிக்கு வீடு திரும்பினார். வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, ரஞ்சித்தை தேடி ஒருவர் வந்தார். இருவரும் வெளியே சென்றனர். ஆனால், நீண்ட நேரமாகியும் ரஞ்சித் வீடு திரும்பவில்லை.
அவரது தந்தை ரன்வீர் சிங், பல இடங்களில் தேடிப் பார்த்தும் தகவல் தெரியவில்லை. அதிகாலை, 4:00 மணிக்கு ரஞ்சித் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக, குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது.
ரன்வீர் சிங் மற்றும் குடும்பத்தினர் அலறியடித்து ஓடினர். மார்பு மற்றும் வலது கையில் கத்திக் குத்து காயங்களுடன் ரஞ்சித் இறந்து கிடந்தார். அருகில் ஒரு பைக்கும் இருந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், ரஞ்சித் உடலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பினர். உடல் அருகே இருந்த பைக்கும் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
ரஞ்சித்தின் தந்தை ரன்வீர் சிங் கூறுகையில், “என் மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. குடும்பத்தைக் காப்பாற்ற ரிக்ஷா ஓட்டி வந்தார். யாருடனும் எங்களுக்கு பகை இல்லை. பைக்கில் வந்த இரண்டு பேர் ரஞ்சித்தை கொலை செய்ததாக தகவல் கிடைத்திருக்கிறது. கொலையாளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை ரோஹிணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாகவும் போலீசார் கூறினர். நாங்கள் சென்ற போது,இருவரும் சென்று விட்டதாக ரோஹிணி போலீசார் கூறினர். இந்த விவகாரத்தில் போலீசார் மெத்தனமாக செயல்படுகின்றனர்,”என, குற்றம் சாட்டியுள்ளார்.
