வளர்ச்சியை நோக்கி சரியான பயணம் கேரளாவில் பிரதமர் மோடி பேச்சு
வளர்ச்சியை நோக்கி சரியான பயணம் கேரளாவில் பிரதமர் மோடி பேச்சு
ADDED : ஜன 18, 2024 01:25 AM

கொச்சி, 'எதிர்காலத் தேவையை நோக்கி சரியாக திட்டமிட்டு, மிக வேகமாக வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. அரசின் இந்த நடவடிக்கைகள், வளர்ந்த நாடாக வேண்டும் என்ற இலக்கை நோக்கிய நம் பயணம் சரியாக செல்கிறது என்பதை உணர்த்துகிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
கேரளாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, கொச்சியில் நேற்று நடந்த பா.ஜ., நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
வாழ்க்கைத் தரம்
இரண்டு அல்லது மூன்று பூத் அளவுகள் உடைய, சக்தி கேந்திரா அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன், 6,000 நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
மத்திய அரசு செயல்படுத்தி வரும் பலதரப்பட்ட வளர்ச்சிப் பணிகள் காரணமாக, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருகிறது. சமீபத்தில் ஒரு அறிக்கையின்படி, கடந்த ஒன்பது ஆண்டுகளில், நம் நாட்டில், 25 கோடி மக்கள் வறுமைப் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
இது, வளர்ந்த நாடாக நம் நாட்டை மாற்றும் இலக்கை நோக்கிய பயணம் சரியாக சென்று கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.
எதிர்காலத்துக்கு தேவையான தொலைநோக்கு திட்டங்களுடன், வளர்ச்சிப் பணிகளை வேகமாக செயல்படுத்தும் ஒரே கட்சியாக பா.ஜ., உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக மக்களிடையே விளக்க வேண்டிய பொறுப்பு கட்சியினருக்கு உள்ளது. அதே நேரத்தில், இங்குள்ள இரண்டு கூட்டணிகளின் முந்தைய மற்றும் தற்போதைய ஊழல் வரலாற்றையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில், 4,000 கோடி ரூபாய் மதிப்புள்ள உட்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
கொச்சி துறைமுகத்தில், புதிய உலர் துறைமுகம், சர்வதேச கப்பல் கட்டும் வசதி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எல்.பி.ஜி., எனப்படும் சமையல் காஸ் முனையம் ஆகியவற்றை அவர் துவக்கி வைத்தார்.
கேரள முதல்வரும், மார்க்., கம்யூ., மூத்த தலைவருமான பினராயி விஜயன், கவர்னர் ஆரிப் முகமது கான், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனவால், வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளீதரன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
சர்வதேச வர்த்தகம்
அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்த திட்டங்கள், தென் மாநிலங்களில் வளர்ச்சியை இன்னும் வேகப்படுத்தும். இந்தியா தற்போது உலகின் சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது.
இதற்கு, நம் கடல்சார் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். இதன்படியே, இதுபோன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அமிர்த காலத்தில் உள்ள நாம், நாட்டை வளர்ந்த நாடாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதில், அனைவரும் இணைந்து செயல்பட்டால், அந்த இலக்கின் பலன் அதிகமாக கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமருக்கு நன்றி!
இதுபோன்ற மிகப் பெரும் திட்டங்களை கேரளாவுக்கு வழங்கியதற்காக பிரதமருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில், முழு ஒத்துழைப்பையும், தன் பங்களிப்பையும் கேரளா வழங்கும்.
பினராயி விஜயன்
கேரள முதல்வர், மார்க்., கம்யூ.,