UPDATED : அக் 25, 2026 09:47 PM
ADDED : அக் 25, 2026 09:44 PM
காத்மாண்டு: வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட ஒரு மாதத்திற்கு பின், நேபாளத்தில் இருந்து 400 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்சாரம் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நம் அண்டை நாடான நேபாளம் மற்றும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் எல்லையில் அமைந்துள்ள இமயமலை தொடரின் லாங்டாங் லிருங் சிகரத்தில், கடந்த, ஆக., 26ல் திடீரென பனிப்பாறை உடைந்து பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால், வடக்கு மற்றும் மத்திய நேபாளத்தின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. இதில் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பனிப்பாறை சரிவால் நீர்மின் நிலையங்கள் பாதிக்கப்பட்டு உற்பத்தி முடங்கியது. இதனால் இந்தியாவுக்கான மின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. சீரமைப்பு பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15 வரையிலான காலத்தில், 63.39 கோடி யூனிட் மின்சாரத்தை நேபாளம் இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.
இந்தக் காலகட்டத்தில், 400 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்சாரம் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக, நேபாள மின்சார ஆணைய நிர்வாக இயக்குநர் தீர்காயு குமார் ஸ்ரேஸ்தா தெரிவித்தார்.
