தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/சபரிமலை அய்யப்பன் கோவில் பிரசாதம் பக்தர்கள் விரைவு தபாலில் பெற ஏற்பாடு

சபரிமலை அய்யப்பன் கோவில் பிரசாதம் பக்தர்கள் விரைவு தபாலில் பெற ஏற்பாடு

சபரிமலை அய்யப்பன் கோவில் பிரசாதம் பக்தர்கள் விரைவு தபாலில் பெற ஏற்பாடு


ADDED : நவ 14, 2026 06:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2026 06:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில், அரவணை பாயாசம், அப்பம் உள்ளிட்ட பிரசாதங்களை, பக்தர்கள் தங்களின் வீடுகளுக்கு விரைவு தபால் மூலம் நேரடியாக அனுப்பும் சிறப்புத் திட்டத்தை தபால் துறையும், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டும் இணைந்து அறிவித்துள்ளன.

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, நாளை மறுநாள், 41 நாட்களுக்கான மண்டல பூஜை காலம் தொடங்க உள்ளன. இந்நிலையில் அங்கு வினியோகிக்கப்படும் பிரசாதங்களை, தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் பக்தர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில், இந்திய தபால் துறை மூலம் அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

இதற்காக, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, தபால் துறை இணைந்து, சபரிமலை கோவில் வளாகத்தில், 24 மணி நேரமும் செயல்படும் பிரத்யேக முன்பதிவு மையத்தை அமைக்க உள்ளது. அரவணை பாயாசம் மற்றும் அப்பம் விற்பனை கவுன்டர்களுக்கு அருகே செயல்பட உள்ள இந்த முன்பதிவு மையத்தின் மூலம், பக்தர்கள், தங்களின் வீட்டிற்கு பிரசாதங்களை, ‘ஸ்பீடு போஸ்ட்’ எனப்படும், விரைவு தபால் சேவை மூலம் அனுப்பலாம்.

வழிபாடு முடிந்து ஊர் திரும்பும் பக்தர்கள், அதிக எண்ணிக்கையிலான பிரசாதங்களை கையில் சுமந்து செல்ல வேண்டிய சிரமம் இதன் மூலம் தவிர்க்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.

சன்னிதானத்திலேயே முன்பதிவு செய்தால், பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பும்முன் பிரசாதம் விரைவு தபால் மூலம் அவர்களின் வீடுகளுக்கு சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு நேரில் செல்ல முடியாத பக்தர்களும், நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள தபால் நிலையத்திற்கும் நேரில் சென்று, ‘இ – பேமென்ட்’ மூலம் முன்பதிவு செய்து பிரசாதத்தை பெறலாம்.

பிரசாத பொட்டலத்தில், அரவணைப் பாயாசம், அபிஷேக நெய், விபூதி, மஞ்சள், குங்குமம், அஷ்டோத்தர அர்ச்சனை பிரசாதம் உள்ளிட்டவை அடங்கும். இவற்றில் 1 அரவணை அடங்கிய சிறிய தொகுப்பு, 450 ரூபாய் எனவும், நான்கு அரவணை டப்பாக்கள் கொண்டவை, 830 ரூபாயும், 10 அரவணை டப்பாக்கள் கொண்ட பெரிய தொகுப்பு, 1,510 ரூபாய் என மூன்று வகைகளில் முன்பதிவு செய்யும் வசதி உள்ளதாக தேவஸ்வம் போர்டு குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us