இயல்பு நிலையில் சபரிமலை 'ஸ்பாட் புக்கிங்' 5,000 ஆனது
இயல்பு நிலையில் சபரிமலை 'ஸ்பாட் புக்கிங்' 5,000 ஆனது
ADDED : நவ 21, 2025 12:03 AM

சபரிமலை: சபரிமலையில், 'ஸ்பாட் புக்கிங்' தினசரி எண்ணிக்கை, 5,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலையில், இந்தாண்டு மண்டல காலம் துவங்கிய ஓரிரு நாட்களிலேயே நெரிசல் கட்டுக்கடங்காமல் சென்றது. இதுகுறித்து, கேரள ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. சபரிமலை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் விஜயராகவன், ஜெயக்குமார் ஆகியோர், 'பக்தர்களை மூச்சு திணற வைத்து கொலை செய்ய அனுமதிக்க முடியாது' என்றனர்.
கூட்டத்தை ஒழுங்குபடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, திருவிதாங்கூர் தேவசம் போர்டு விளக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ஸ்பாட் புக்கிங்கில் அனுமதிக்கப்படும் பக்தர்கள் எண்ணிக்கையை, 5,000 ஆக உடனடியாக குறைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி, நேற்று முதல் ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை, 5,000 ஆக குறைக்கப்பட்டது. நிலக்கல், வண்டிப்பெரியாறில் மட்டுமே ஸ்பாட் புக்கிங் உள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. நவ., 24 வரை இது அமலில் இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோர்ட் உத்தரவால் ஸ்பாட் புக்கிங் குறைக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று சபரிமலையில் இயல்பு நிலை திரும்பியது. பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் முடிந்து சென்றனர். ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வந்து தரிசனம் செய்யலாம் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

